திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்வான அங்கூரார்ப்பணம் அங்கூர விநாயகர் கோயிலில் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழாவின் 9-ம் நாளான வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான தொடக்க நிகழ்வாக அங்கூரார்ப்பணம் நேற்று மாலையில் அங்கூர விநாயகர் கோயிலில் நடைபெற்றது.
இதனிடையே திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
தேர் திருவிழா நாளில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதால் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகன போக்குவரத்தினை மாற்றுப்பாதையில் செல்ல முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
» குமரியில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்
தேரோட்டத்தின்போது மின் கம்பிகளால் இடையூறு இல்லாத வகையில் மின்வாரியத்தினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மூலம் சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பிடங்கள் வசதி, சுகாதார வசதி செய்து கொடுக்கப்படும். ரவீதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவில் அன்னதானம் கட்டாயம் வழங்குவதற்கு காவல்துறை மற்றும் மாநகராட்சி முன் அனுமதி பெற வேண்டும். உணவு தரமான முறையில் உள்ளதா என்பதை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவின்போது சாப்டர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகர வர்தத்தக மையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநகர துணை காவல் ஆணையர் ஆதர்ஸ் பச்சேரா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன், துணை ஆணையர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.