பிரதமருக்காக வழிபட்ட வானதி சீனிவாசன்!

By கரு.முத்து

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனீவாசன், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளோடு இருக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடியும், காவிரிக்கு ஆரத்தி எடுத்தும் பிரார்த்தனை செய்தார்.

காவிரிக்கு ஆரத்தி

உத்தர பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில், ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டன. அதை காணொலிக் காட்சி வாயிலாக நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு இடத்தில் நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்டனர்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதினத்திலும் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாருடன் இணைந்து, அதைக் காண வானதிசீனீவாசன் இன்று காலை மயிலாடுதுறைக்கு வந்தார்.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்

மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டக் காவிரியில், ஐப்பசி மாதத்தில் புனித நீராடினால் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடி கிடைக்கும் முழுப் பலனும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி காசிக்கு இணையானதாக போற்றப்படும் காவிரி துலாக்கட்டத்தில், வானதி சீனிவாசன் தனது கணவர் சீனிவாசனுடன் இன்று புனித நீராடினார். தொடர்ந்து காவிரிக்கு மகா ஆரத்தி எடுத்தும் வழிபாடு மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’நாட்டு மக்கள் நலமுடன் வாழவும், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளோடு இருக்கவும் புனிதமிக்க இந்தக் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தோம்” என்றார் வானதிசீனிவாசன். அதன்பின்னர், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, பிரதமரின் நிகழ்ச்சியை காணொலிக் காட்சி வழியாகப் பார்த்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE