கடவுளின் இடத்தில் ஒழுக்கம்!

By யாழன் ஆதி

அமைதியான மனம்

பேச்சு

செயல்

முற்றும் விடுதலை அடைந்த உணர்வு

பரிபூரண சமநிலை உடையோரை

வாழ்வின் மேடுபள்ளங்கள்

கவிழ்ப்பதில்லை. (தம்மபதம் 96)

கடவுளை வைக்கும் இடத்தில் பௌத்தம் தம்மத்தை வைக்கிறது. தம்மம் என்பது ஒழுக்கம். புத்தரின் போதனைகள் எதுவும் வானத்திலிருந்து வந்தவை அல்ல. அவை முழுக்க முழுக்க மனித வாழ்விலிருந்து பெறப்பட்ட அனுபவங்கள்.

தன் உடலை வருத்தி, மிகக் கடினமாக தவம் புரிந்து ஞானத்தை அடைய முற்படுகிறார் புத்தர். அவருடைய உடல்நிலை மிக மோசமாக மாறுகிறது. உடல் எலும்புதோல் போர்த்தியதாக ஆகிவிடுகிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், தாம் ஞானமடையாமலேயே இறந்துவிடுவோம் என்று அஞ்சுகிறார். அதனால் உடனே அந்தத் தவத்தைக் கலைத்துவிட்டு, உடல் நலத்தை தேற்ற உணவு உட்கொள்கிறார். உடல் இருந்தால்தான் நாம் அறிவைப் பெற முடியும் என்று, உடல் குறித்த அக்கறையை மேற்கொள்கிறார் என்கிறது அவரது வாழ்க்கைக் குறிப்பு.

மகிழ்ச்சியால் சூழ்ந்திருத்தல்!

‘மெட்டா சுத்தம்’ என்னும் புத்தரின் போதனை அதை வலியுறுத்துகிறது. பிறரை நேசிக்க நாம் முதலில் நம்மை நேசிக்க வேண்டும் என வலியுறுத்தும் போதனை. ”நான் கருணையால் நிறைந்திருக்க வேண்டும்; நான் என்னை அப்படியே புரிந்துகொள்ள வேண்டும்; நான் மகிழ்ச்சியால் சூழ்ந்திருக்க வேண்டும்” என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் பிறரைப் பார்த்து, ”நீங்கள் மகிழ்வாக இருங்கள்; நலமாக இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்; மன அமைதியுடன் இருங்கள்” என்று நாம் கூற முடியும். ஆக, அவருடைய சிந்தனைகள் எல்லாம் அவர் அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.

தம்மம் என்பது சமூகத்துக்கானது. ஏனென்றால், ஒழுக்கம் இல்லாத சமூகம் அடுத்த கட்டத்துக்கு நகராது. அறிவின் பாதையில் மானுடத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதானே பௌத்தம்!

அதற்கு என்ன செய்ய வேண்டும்? நாம் போற்றுதலுக்குரியவராக மாற வேண்டும்.

வாழ்வுப்பாதையைக் கடந்தவருக்கு

கவலைகள் அற்றோருக்கு

எல்லாவற்றினின்றும் விடுதலை பெற்றோருக்கு

கட்டுகளை அறுத்தோருக்கு

மேலும்

ஆசைகள் இருப்பதில்லை (தம்மபதம் 90)

வீட்டைவிட்டு புத்தர் வெளியேறியது ஏன்?

சுயநலமற்று எப்போதும் பிறர் நலம் போற்றும் பண்புடையவர்கள், மக்களின் மீது தீராத அன்புடையவர்கள் தங்களைத் தங்களின் குடும்பத்துக்காக மட்டும் அர்ப்பணித்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மக்களுக்கானவர்களாக மாறிவிடுகிறார்கள். நீர்வற்றிய குளத்தை விட்டு அன்னப்பறவை நீங்கிவிடுவதைப் போலவே, அவர்கள் வீட்டினின்று வெளியேறிவிடுகிறார்கள் என்கிறார் புத்தர். புத்தரின் போதனைகளைக் கேட்டு, தம்மத்தைப் பரப்ப உலகெங்கிலும் கோடிக்கணக்கான பேர் இப்படித்தான் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

செல்வம் தேடி அலையாமல், அதிகமாக உண்ணாமல் அளவறிந்து உண்டு, விடுதலையை அடைய வேண்டும் என்கிற நோக்கோடு செல்லும் ஒருவர் அடையும் இடத்தை நாம் காணமுடியாது. ஏனென்றால், பறவையின் தடத்தைக் காற்றில் எப்படி கணக்கெடுக்க முடியும்? பழக்கப்பட்ட விலங்கை எப்படி நம் கட்டுக்குள் வைத்திருக்கிறோமோ, அப்படி நம் புலன்களை அடக்க வேண்டும். தற்பெருமை போன்ற தன்னழுக்குகளை அழித்தோமானால், நாம் மேன்மையுற்றோராலும் விரும்பப்படுவோம் என்று தெளிவாக்குகிறது தம்மப்பதம்.

எட்டு நிலைகள்!

நிலம் போல் பொறுமை, திருக்குறளிலும் உண்டு. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ யார் எப்படி எரிச்சலூட்டினாலும் கோபம் கொள்ளாமல் இருப்பது, ஒரு தெளிந்த ஏரியின் தூய்மையைப் போல் மனம் கொண்டிருப்பவருக்கு எப்போதும் துயரில்லை.

வாழ்க்கை என்பது மேடுபள்ளங்கள் நிறைந்தது. அவற்றை அப்படியே தாண்டி ஒரே தாவில் தாவிச் சென்றுவிட முடியாது. ஒவ்வொன்றையும் நாம் கடந்தே ஆக வேண்டும். ஆனால், ஒருபோதும் இடறிவிடலாகாது. பௌத்தம் அறுதியிடுகிறது, அமைதியான மனம் இருக்க வேண்டும், விரும்பியதன் மீது பற்றும், விரும்பாததன் மீது வெறுப்பும் கொள்ளலாகாது.

வாழ்வின் எட்டு நிலைகளிலும் நாம் மாறாமல் இருக்க வேண்டும். பெறுதலிலும் இழத்தலிலும், புகழிலும் இகழிலும், வாழ்த்துதலிலும் வைதலிலும், இன்பத்திலும் துன்பத்திலும் மாறாத மனத்துடன் இருத்தல் வேண்டும். நற்பேச்சு இருக்க வேண்டும். நற்செயல் இருக்க வேண்டும். முழுதும் அடைந்த விடுதலை உணர்வு வேண்டும். எல்லா நிலைகளிலும் மனச்சமநிலை வேண்டும். இப்படி இருந்தால் வாழ்வின் மேடுபள்ளங்கள் நம்மை கவிழ்க்காது.

எந்த இடமாக இருந்தாலும் கிராமம், நகரம், அடர்ந்த காடு, பள்ளத்தாக்கு, மலைமுகடு என புவிப்பரப்பின் எந்த இடமாக இருந்தாலும் இத்தகைய குணமுடைய ஞானமடைந்தவர்கள் தங்களின் இருப்பால் ஒளியுடையவர்களாக இருப்பார்கள்.

அந்த ஒளியால் அவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவரையும் இருப்பவற்றையும் ஒளிமிக்கதாக மாற்றிவிடுவார்கள்.

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
பிறருக்கென வாழ்பவரே அறிவுடையார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE