நேரம்.. காலம்..

By கே.சுந்தரராமன்

“எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வரவேண்டும்” என்று சொல்வதுண்டு. அது அது நடைபெற வேண்டிய நேரத்தில் கட்டாயம் நடைபெறும் என்று ஒரு ஆறுதலுக்காக கூறப்பட்டாலும், அது சமயத்தில் பொய்த்துப் போவதும் உண்டு.

ஞானி போன்றோருக்கு விரைவில் பக்குவம் / அறிவு முதிர்ச்சி வந்திருக்கும். சிலருக்கு வயது ஆக ஆக வரும். சிலருக்கு வரவே வராது.

இந்தப் பக்குவம் / புரிந்து கொள்ளுதல் / அறிவு முதிர்ச்சி / ஞானம் எல்லாம் அது வரும் காலத்தில் வரட்டும். அதை நாமாகத் தேடி அலைய வேண்டாம். நமக்கு அந்தப் பக்குவம் வர வேண்டும் என்றால், அது தானாகவே வந்துவிடும். எதையும் நாமாக நமக்குள் திணிக்கக் கூடாது.

இப்ப புரிந்தும் புரியாதது போல் இருக்கும்.

ஒரு மரத்தில் பூ இருக்கிறது. அது காலப்போக்கில் காயாகவும் பிறகு கனியாகவும் மாறுகிறது. பூவாக இருக்கும்போது மூக்கின் துணையோடு நாம் அதன் மணத்தை நுகர்கிறோம். காயாக / பழமாக இருக்கும்போது நாக்கின் துணையோடு நாம் அதன் சுவையை உணர்கிறோம்.

பழம் சுவையாக இருக்கிறது. அது பழ நிலைக்கு வருவதற்குள் உருவத்திலும் சுவையிலும் பல மாற்றங்களை அடைகிறது. பூ – கசப்பு, பிஞ்சு – துவர்ப்பு, காய் – புளிப்பு, கனி – இனிப்பு / மதுரம்.

இந்த மதுரம் / இனிப்பு சுவை வந்ததும் சாந்தம் வருகிறது. அப்போது அனைத்துப் பற்றும் போய்விடும்.

புளிப்புச் சுவை இருக்கும்வரை பற்று இருக்கும். காயாகப் பறித்துவிட்டால், அதில் இருந்து பால் வரும். இதுதான் பற்று. சில நாட்கள் இந்தப் பற்று இருக்கும். பிறகு மதுரம் / இனிப்பு சுவை ஏற ஏற, இந்தப் பால் காய்ந்து, மரத்துக்கும் கனிக்குமான பந்தம் விடுபடுகிறது.

அதேபோல மனிதனும் தனது அறிவு நிலை முதிர்ச்சி அடைய கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவைகளைத் தாண்டி இனிப்பு / மதுரச் சுவையை அடைய வேண்டியுள்ளது. அதனால்தான் முனிவர்களை / ஞானிகளை சிவப் பழமாக இருக்கிறார் / தேஜஸுடன் இருக்கிறார் / வைணவப் பழமாக இருக்கிறார் என்று கூறுகிறோம்.

சின்ன வயதில் நிறைய பொய் வரும். கோபம் வரும். விருப்பம் இருக்கும். ஒரு பொருளின் மீது அதீத பற்று இருக்கும். அதையெல்லாம் தாண்டி ஒரு காலகட்டத்தில் உண்மை நிலைக்கும். கோபம் குறையும். விருப்பம் குறையும். ஒரு பொருள் மீது இருந்த பற்று குறையும் / நீங்கும்.

அதனால் பூவில் இருந்து கனி உருவாவது போல், நமது பக்குவமும் நாளுக்குநாள் மெருகேறும். அதற்கு நேரம், காலம் கூடி வரவேண்டும்.

சர்வம் இறை மயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE