சமயம் வளர்த்த சான்றோர் - 50: தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

By கே.சுந்தரராமன்

கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி பக்தியோகமும் கர்மயோகமும்தான் என்பதையும், நாமசங்கீர்த்தனமே முக்திக்கு வழி என்பதையும் அனைவருக்கும் உணர்த்தியவர் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கபீர்தாஸ், ஷீரடி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமலிங்க வள்ளலார், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர், பகவான் ரமணர் முதலான மகான்களைச் சந்தித்து பக்தர்களை நல்வழிபடுத்துவது குறித்து ஆலோசித்தவர் இவர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களகிரி என்ற ஊரில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெங்கோபா சாஸ்திரிகள் – சக்குபாய் தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் மகனாக, தை மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தில் சுப்பிரமணியம் பிறந்தார். பிறந்தது முதலே இறை நம்பிக்கை, ஆன்மிக நாட்டத்துடன் வளர்க்கப்பட்டார். அவ்வப்போது தியானத்தில் ஈடுபட்டு வந்தார். நண்பர்கள் பலரிடம் தியானத்தின் சிறப்புகளைக் கூறிவந்தார். ‘நான்’ யார் என்பதை உணர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார். இதற்கான விளக்கத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.

தீபஸ்தம்பம்

7 வயதில் சுப்பிரமணியத்துக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. பார்த்தவுடன் அனைத்தையும் உணரும் திறன் இருந்ததால், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை கற்றறிந்தார்.

தன்னுடைய 12-வது வயதில் ஒருசமயம் தியானத்தில் ஈடுபட்டபோது, உள்ளுக்குள் ஒரு பேரொளியைக் கண்டார். அந்த பேரொளி அவரை தலயாத்திரை செல்ல வழிகாட்டியது. அதன்படி சுப்பிரமணியம், இல்லத்தைவிட்டுக் கிளம்பி, பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

பல நாட்கள் கழித்து பண்டரிபுரத்துக்குச் சென்றார். பண்டரிநாதரின் நாமம் சொல்லியபடி அங்கேயே தங்கிவந்தார். அந்தச் சமயத்தில், ஜோதிர் மடத்தின் பீடாதிபதி (ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட 4 மடங்களில் ஒன்று) சிவரத்தின கிரி சுவாமிகள் பண்டரிபுரத்துக்கு வந்திருந்தார். சிவரத்தின கிரி சுவாமிகளின் வருகையை அறிந்த சுப்பிரமணியம், அவர் இருக்குமிடம் சென்று தரிசித்தார்.

குருநாதர் தரிசனம்

தன்னுடைய சுயத்தை அறிய இவர், தனது குருவாக இருந்து வழிகாட்டுவார் என்ற எண்ணம், சுப்பிரமணியத்தின் மனதில் எழுந்தது. “இந்த உலகம் சச்சரவு, துக்கம், வேதனை போன்றவற்றால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நான் அவற்றில் இருந்து விடுபட வேண்டும். எனது ஆன்மிக சிந்தனைகளைச் செம்மைப்படுத்த வேண்டும். நான் யார் என்பதை உணர வேண்டும். அதற்குத் தாங்கள் எனக்கு அருள்புரிய வேண்டும்” என்று அவரிடம் வேண்டினார்.

சிவரத்தின கிரி சுவாமிகள், அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டு, ‘பிரக்ஞான பிரம்மச்சாரி’ என்ற பெயர் சூட்டி, தான் யாத்திரை செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவரை அழைத்துச் சென்றார். அவ்வப்போது வேத, வேதாந்தக் கருத்துகளை சுப்பிரமணியத்திடம் கூறிவந்தார். சுப்பிரமணியம் தகுந்த பக்குவத்தை அடைந்ததை உணர்ந்த சுவாமிகள், அவருக்கு ‘ஞானானந்த கிரி’ என்ற நாமம் சூட்டி, சந்நியாசம் அளித்து அவரை மடாதிபதியாக நியமித்தார்.

ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

சந்நியாசம் பெற்ற பிறகு ஞானானந்தர், இமயமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கு பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்து தவநெறிகளை அறிந்தார். கங்கோத்ரியின் புனிதத் தலத்திலும், இமயமலையின் பனிக்கட்டி குகைகளிலும் தவம் மேற்கொண்ட ஞானானந்தர், பின்னர் இந்தியா முழுவதும் பயணித்து, திபெத், நேபாளம், மியான்மர், இலங்கை முதலான இடங்களுக்கு யாத்திரை சென்று தமிழகம் வந்தடைந்தார்.

ஞானானந்தர் தபோவனம்

தமிழகத்தில் சேலம், கொல்லிமலை, போளூர் சம்பத் கிரிமலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கியிருந்து தவம் புரிந்தார். சேலம் ஆட்டையாம்பட்டியிலும் விழுப்புரம் சித்தலிங்கமடத்திலும் ஆசிரமங்களை நிறுவினார். திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள தபோவனம் (மணம்பூண்டி என்ற ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவு) என்ற ஊரை அடைந்து, அங்கேயே தங்கத் தொடங்கினார். அதையே தனது வாழ்விடமாகக் கொண்டார். அந்த இடம் ‘ஞானானந்தர் தபோவனம்’ என்று அழைக்கப்பட்டது.

ஞானானந்தர் தபோவனத்தில் ஞானகணேசர், ஞானஸ்கந்தன், ஞானபுரீசா, ஞானாம்பிகா, மகாலட்சுமி, ஞான வேணுகோபாலர், ஞான பைரவர், ஞான ஆஞ்சநேயர், சிவன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. சேலத்துக்கு அருகே உள்ள ஏற்காட்டிலும் ஆசிரமம் (பிரணவ நிலையம்) எழுப்பப்பட்டது. ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கத்தை பரப்பிய ஞானானந்தர், அனைவருக்கும் ஏற்ற பக்திநெறியான ஸ்துதி, ஜபம், நாம சங்கீர்த்தனம் மூலம் மனிதர்கள் எளிதில் இறைவனை நெருங்கலாம் என்பதை அறிவுறுத்தினார்.

உபதேச மொழிகள்

சிரித்த முகம், எளிமையான காவி உடை, கருணை பொங்கும் கண்கள் கொண்டதால், ஞானானந்தரை அனைவரும் ‘கருணா மூர்த்தி’ என்று அழைத்தனர். அன்பின் மறுஉருவாக இருந்த ஞானானந்தர், பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்கள் அந்தக் கவலைகளில் இருந்து வெளிவருவதற்காக யோகாசனப் பயிற்சிகளை அளித்தார். இறைநாமங்களை எப்போதும் சொல்லும்படி அறிவுறுத்தினார்.

அகண்ட நாம பஜனை ஒருவரை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதையும் நான், எனது என்ற எண்ணங்களை விடுத்து ஒருவர் தன் கடமைகளைச் செய்யும்போது, அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது என்பதை அனைவரிடத்தும் வலியுறுத்தினார். அனைவரும் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினார். தபோவனத்தில், பலரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பக்தர்கள் அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு என்று விருந்து அளிக்கப்பட்டது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ரகோத்தம் தீர்த்தர், ஸ்ரீ அரவிந்தர், பகவான் ரமணர், ராமலிங்க வள்ளலார், கபீர்தாஸ், ஷீரடி சாய்பாபா முதலான மகான்கள், ஞானானந்த தபோவனத்துக்கு வந்து, மக்களை நெறிப்படுத்துவது தொடர்பாக சுவாமிகளுடன் ஆலோசனை செய்து, தியானம் செய்து உணவருந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஞானானந்தரின் சீடர்கள்

ஞானானந்தரின் அத்வைத உபதேசங்களைக் கேள்வியுற்ற பலர், அவர் இருக்கும் இடம் வந்து அவரது சீடரானார்கள். ஞானானந்தரின் சீடர் வித்யானந்த கிரி, பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் பற்றிய ஆதிசங்கரரின் விளக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். சனத்சுஜாதியம் போன்ற அத்வைத நூல்களின் தமிழ்ப் பதிப்புகளை வெளியிட்டார்.

ஞானானந்தரின் சீடர்கள் சுவாமி ஹரிதாஸ் கிரி (பாகவத ரத்னாகரம் நோட் அண்ணாஜி ராவின் ராவின் மகன்), ஸ்ரீஹரிஹரன் கிரி ஆகியோர் ஞானானந்தரின் உபதேசங்களைப் பல இடங்களுக்குச் சென்று பரப்பிவந்தனர். சுவாமிகளின் எண்ணப்படி நாமசங்கீர்த்தனம் மூலம் பக்திநெறி போற்றி வந்தனர். ஞானானந்தர் இயற்றிய பாடல்களையும் பிரபலப்படுத்தினர்.

சுவாமி ஹரிதாஸ் கிரி, ஞானானந்தரின் பாதுகைகளைத் தன்னுடன் எடுத்துச் சென்று, அனைத்து புனித தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டு நாமசங்கீர்த்தனம் செய்தார். பல்வேறு நாடுகளிலும் பஜன் மண்டலிகள், சமாஜங்களை நிறுவினார்.

பக்தர்களுடன் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

மருத்துவரான ஸ்ரீஹரிஹரன் கிரி, ஈரோட்டில் குடியேறி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கு மருத்துவ சேவை செய்துவருகிறார். 19-வது சித்தர் என்று ஞானானந்தரால் போற்றப்பட்ட இவர், ஜோதிடம், மந்திர – தந்திர – யந்திர பிரயோகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். ஸ்ரீ ஈரோடு குருஜி என்று அழைக்கப்படும் இவர், குருபக்திக்கு சாட்சியாக இன்றும் ஆன்மிகநெறி பரப்பி வருகிறார். ஈரோட்டில் இவர் வசிக்கும் இடம், ஞானானந்த தபோவனத்தின் கிளையாகவே போற்றப்படுகிறது.

பூரண ஆரோக்கியம்

ஞானானந்தர் எப்போதும் தன் வேலைகளைத் தானே செய்து கொள்வார். தானே கிணற்றில் இருந்து நீர் இறைத்து நீராடுவார். தபோவனத்தில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகளை, தானே மேற்பார்வையிடுவார். எப்போதும் பூரண ஆரோக்கியத்துடன் இருந்த ஞானானந்தரைக் கண்டு அனைவரும் வியந்ததுண்டு. பசுக்களுக்கென்று கோசாலை அமைத்து அவற்றைப் பாதுகாத்து வந்தார்.

பல்லாண்டு காலம் வாழ்ந்த ஞானானந்தர் (ஏறத்தாழ 150 வருடங்கள்), 1974-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, தபோவனத்தில் மகா சமாதி அடைந்தார். மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமிகளின் சிலை, தட்சிணாமூர்த்தியாக அறியப்படுகிறது. ரூபத்துக்கும் அரூபத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டும் என்பதற்காக, அவரது சமாதிக்கு மேலே மகாலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுயமாக ஒளிரும் பிரம்மம் என்பதை விளக்கும்விதமாக சிலையின் முன் தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

துலாபாரம்

இன்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற சிறுவர், சிறுமியர், சுவாமிகளின் சந்நிதானத்தின் முன்னர் கோஷ்டியாக சமஸ்கிருத ஸ்லோகங்கள், கர்னாடக சங்கீத கீர்த்தனைகள், பஜன்களைப் பாடி வருகின்றனர். ஞானானந்தர் செய்த நற்பணிகளை, இச்சிறுவர்கள் முன்னின்று செயல்படுத்துகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதைத் தங்கள் கடமைகளாகச் செய்து வருகின்றனர்.

பண்டரிநாதரின் மகிமையால் ஞானானந்தர் ஈர்க்கப்பட்டதால், பண்டரிபுரம் கோயிலைப் போன்ற ஓர் அமைப்பு, வந்தவாசி அருகே தென்னாங்கூர் என்ற ஊரில் சுவாமி ஹரிதாஸ் கிரியால் அமைக்கப்பட்டது. ரகுமாயீ சமேத பாண்டுரங்க விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயிலின் பின்புறம் ஞானானந்த கிரி சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. மதுராவில் மட்டுமே அதிகம் காணப்படும் தாமால மரம், இங்கு தலவிருட்சமாக அமைந்துள்ளது.

(நிறைவு)

பெட்டிச் செய்தி

ஞானானந்த சுவாமிகளின் வயது என்ன?

சமாதி அடையும் வரை பூரண உடல்நலத்துடன் இருந்த சுவாமிகளை தரிசிக்க எண்ணற்றோர் வந்து சென்றபோது, ஒரு பெண், “சுவாமி, தங்களுடைய வயது என்ன?” என்று வினவ, அதற்கு சுவாமிகள், “பதினாறு” என்று பதிலளித்தார். மேலும், “இந்து ஆன்மிக பாரம்பரியத்தில், உடல் என்பது ஒருபுறம் பொருளற்றதாகக் கொள்ளப்படுகிறது. மற்றொரு புறம் தெய்வீகமாக, கோயிலாகக் கொள்ளப்படுகிறது. உடலின் வயது, பல சமயங்களில் யோகப் பயிற்சிகளால் வெற்றி காணப்படுகிறது.

ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

ஒருவரது வயது மற்றும் வெளிப்புறங்களை ஆராய்வதை விட்டுவிட்டு, அவரது உயர்ந்த சுயத்தை உணர்ந்துகொள்ள, அனைவரும் இப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முயற்சி செய்தால் இந்த உடலை ஒரு கோயிலாக மாற்றலாம். உள்ளத்தில் இறை உணர்வும் பக்தியும் இருந்தால் எதற்கும் வயது தடையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE