ஆண்டாள் கிளி

By கே.சுந்தரராமன்

ஊர் ஊராகக் கிளிகள் சுற்றினாலும், அவை தேர்ந்தெடுத்த ஓர் இடம், ஆண்டாளின் தோள். ஆண்டாளின் தோளில் உள்ள கிளி, பக்தர்களின் கோரிக்கையை பெருமாளுக்கு தெரிவிக்கும். கோயில் அலங்காரத்தில் இந்தக் கிளி சிறப்பிடம் பெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் தோளில் வைப்பதற்காக, தினம் தினம் ஒரு புதுக் கிளி தயார் செய்யப்படும். முதல்நாள் கிளியை, மறுநாள் கோயிலுக்கு வரும் உபயதாரர், முக்கிய பிரமுகர் என்று கொடுப்பது வழக்கம். ஆண்டாள் தோளில் 3 மணி நேரத்துக்கும் மேல் இருப்பதால், அதைப் புனிதப் பொருளாக, பக்தர்கள் கருதி மகிழ்வது வழக்கம்.

அந்தக் கிளியைச் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகும் என்று அங்குள்ள பூக்கட்டுபவர் தெரிவிக்கிறார். இலை, நார், பூ, மூங்கில் குச்சி இவற்றைக் கொண்டு செய்யப்படுவதுதான் இதன் சிறப்பாகும். வாழை இலைச் சருகுகளை வைத்துக் கிளி உருவம் வருவதுபோல், நார் கொண்டு சுற்றுவது முதல் வேலை. அப்போது கிளி உருவம் தோன்றுகிறது. அப்புறம் மரவள்ளி செடியின் இலை, சருகைக் கட்டுவார்கள். இப்போது கிளியின் தோற்றம் முழுமைபெறும். அப்படியே மூக்கு வைக்கப்படும்.

கிணறு வெட்டும் இடங்களில் கிடைக்கும் காக்காபொன் கற்சில்லுகளை வைத்துக் கிளியின் கண் தயாராகும். பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரளி இலை வைத்து இறக்கை கட்டப்படும். அவற்றையே பயன்படுத்தி வால் தயாராகும். கால்களுக்கு மூங்கில் குச்சிகள்; கிளியை நிற்க வைக்க பூச்செண்டு. நந்தியாவட்டை பூ, செவ்வரளி பூக்களைக் கொண்டு ஒரு பூச்செண்டு. இப்போது கிளி தயார்.

சாயரட்சை பூஜையின்போது இந்தக் கிளி சென்று ஆண்டாள் தோளில் அமரும். அர்த்தஜாமப் பூஜை வரை அங்கு அமர்ந்துவிட்டு, பூமாலை முதலியவை களையப்படும்போது அகற்றப்பட்டு, மறுநாள் கோயிலுக்கு வரும் ஒருவருக்கு கொடுக்கப்படும்.

என்று யார் கையில் சென்று அமருமோ… அந்தக் கிளிப்பிள்ளை….?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE