அறியாமையின் இருளில் மறைந்திருக்கும் வாழ்வினை மீட்டிடவே தன் வெளிச்சக் கதிர்களை உலகின்மீது பாய்ச்சினார் புத்தர். மனித இனத்தின் துன்பங்களை விரட்டி அதற்கு நிலையான இன்பத்தை நல்க வேண்டும் என்பதுதான் புத்தரின் மூலம். அதனால் மனம் என்னும் ஒன்றைப் பற்றி பௌத்தம் மிகத் தீவிரமாக விவாதிக்கிறது.
அறிவியல்பூர்வமாக மனம் என்னும் உறுப்பு ஒன்று இல்லை என்பதை நாம் அறிவோம். ’மனத்தைத் தொட்டுச் சொல்கிறேன்’ என்று கூறி, நாம் நம்முடைய மார்பின்மீது கையை வைப்போம். மனம் அங்கில்லை; மனம் சிந்தனைகளின் தொகுப்பு. மனித மனத்தை நல்வழிப்படுத்தினால் மனித இனத்தையே நல்வழிப்படுத்தலாகும் என்பது பௌத்த அறம். ஆகையால்தான், புத்த வந்தனத்தைச் சொல்லிடும்போதோ அல்லது திரிசரணத்தைச் சொல்லிடும்போதோ மூன்றுமுறை சொல்வார்கள். காரணம் அப்போதுதான் மனத்தில் ஏறும்; அது சொல்லாக மாறும்; செயலாகித் தீரும்.
அலைபாயும்
கட்டுக்கடங்கா மனம்
காப்பாற்றப்பட முடியாதது
ஆயுதம் செய்பவன்
அடித்து அடித்து
அம்பை நேராக்குவதுபோல
அறிவுள்ளவர் மனத்தை நேராக்கிக் கொள்கிறார் (தம்மபதம் 33)
மனம் எங்கே?
மனத்தின் பிடியிலிருந்து விடுபடக் கற்றுக்கொள்வதுதான் ஞானம் என்பார் எக்ஹார்ட் டேலி. மனம் எதுவாக இருக்கிறதோ வாழ்க்கை அதுவாக இருக்கிறது. மனம் என்பது, நாம் ஏற்கெனவே சொன்னதைப் போல அது ஓர் உறுப்பல்ல; ஆனால், அது நம் சிந்தனைகளின் தொகுப்பு.
இந்த சிந்தனைகள் நல்லெண்ணங்களாக வலுப்பெற வேண்டும். பிறர் மீது கோபம்கொள்ளுதல், பொறாமைக் கொள்ளுதல், போன்ற குணங்கள் நல்லெண்ணங்களை உருவாக்க இயலாது. ஆகவே, இந்த உடலுக்கும் சிந்தனைகளுக்கும் உள்ள உறவை நாம் சரியாக உள்வாங்கிக்கொள்ளும்போதுதான், மனத்தின் ஆற்றல் நமக்கு நன்கு விளங்கும்.
துன்பமற்ற நிலை வேண்டுமா?
மனத்தை சமன் செய்ய பௌத்தம் எப்போதும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. இன்பம் துன்பம் என இரண்டையும் ஒன்றாய் பாவிக்கும் மனமே, துன்பமற்றதாக இருக்க முடியும் என்பது தெளிவான ஒன்று. ஆகையால்தான் பிரக்ஞா, சமாதி என்ற கருதுகோளை முன்வைத்து அமைதியான மனமே எல்லாவற்றையும் அடையும் தாத்பரியம் இங்கே கிடைத்துவிடுகிறது.
மனத்தை அடக்குதல் தீயனை வெல்தல் ஆகும். ‘தீயன்’ என்பவன் யாரோ அல்ல, நமக்குள் இருக்கும் நாமாகவும் இருக்கலாம். அப்படி அடக்கப்படும் மனத்தால் அறிவின் முழுமையான ஞானத்தை அடையமுடியும். நம்பிக்கை ஊசலாடுகிற மனத்தை உடையவர்கள், ஒருபோதும் அறிவின் முழுமையை அடைய முடியாது. ஒரே நேரத்தில் மனம் 2 எண்ணங்களைக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட மனநிலையில் எதையும் சரியாகவும் செய்யலாகாது.
நன்மை தீமைகளைத் தாண்டிய மனமே செயல்படும். அது எப்போதும் சும்மா இருக்காது. பேராசையில் திளைக்காமல் வெறுப்பால் நிறையாமல் இருக்கும் மனமுடையவரே அச்சமற்றவராக முடியும். இந்த உடலை மண்ணில் வைக்கக்கூடிய மட்பாத்திரம் என அறிந்து, மனத்தை காவலாக்கி தன் அறிவென்னும் ஆயுதத்தால் தீமைகளைத் தாக்கி வெற்றிப் பெறுபவர்கள் பற்றற்ற ஞானிகளாகிவிடுகின்றனர்.
ஒருவருக்கொருவர் உதவுங்கள்!
தியானம் செய்வது குறித்து முழுமையாக அறிந்துகொண்டபின், திஸ்ஸா என்னும் பிக்கு தியானம் செய்ய காட்டுக்குள் போகிறார். அவருக்கு திடீரென்று உடலெல்லாம் கொப்பளம் வந்து ரத்தமும் சீழும் வடிகிறது. புத்தர் அவரை வந்து பார்த்தார். அருகிலிருக்கும் சமைக்கும்கூடத்துக்குச் சென்று வெந்நீர் வைத்து, அவர் காயங்களைத் துணியால் நனைத்துத் துடைத்தார். பிற பிக்குகளும் புத்தரைப் பார்த்து திஸ்ஸாவுக்கு உதவினார்கள். அங்கிருந்த பிக்குகளைப் பார்த்து, “பிக்குகளே உங்களைக் கவனித்துக்கொள்ள இங்கே உங்கள் பெற்றோர்கள் இல்லை. நீங்கள்தான் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். யார் அப்படி பிறருக்குச் செய்கிறார்களோ, அது எனக்குச் செய்த மாதிரி” என்று புத்தர் கூறினார்.
பிறருக்கு உதவும் மனம் வாய்க்கும்போது, வேறுபாடுகளைப் பார்க்காத சமூகம் அமைவதற்கு வழிகள் இருக்கின்றன. பகைவர்கள் செய்யும் தீமையைவிட மனம் செய்யும் தீமை அளக்க முடியாதது.
மனிதத்தின் மூலமாக, இருக்கின்ற மனத்தை பக்குவப்படுத்துவதும் மனத்துக்கண் மாசிலன் ஆகுவதும் பௌத்த அறம்.
நல்மனம் செய்வனபோன்று
தாய் தந்தை உறவினர்
எவரும் செய்வன இல்லை (தம்மபதம் 43)
(தம்மம் தொடரும்)
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.comவிழிப்பு மட்டுமே போற்றப்படும்! : தம்மத்தின் பதம் -3