ராம நாம மகிமை

By கே.சுந்தரராமன்

ராம நாம மகிமையை உணர்ந்து விட்டால் அனைத்து சப்தங்களும் ராம என்றே கேட்பதாக சான்றோர் பெருமக்கள் கூறுவர்.

கும்பகோணம் – மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ள கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்தில் ராம நாமத்தை கூறுபவர்களுக்குக் காக்கை கரைவது, மயில் ஆடும் சத்தம், குயில் கூவும் சத்தம், பைப்பில் இருந்து தண்ணீர் வரும் சத்தம், வாகனங்களின் ஹாரன் சத்தம், மனிதர்கள் பேசுவது – இப்படி எல்லாமே ராம சப்தமாகவே கேட்கும் என்று கூறுவர். ராம நாம மகிமையை உணர்த்துவதற்காக ஒரு புராணக்கதை கூறப்படுவதுண்டு.

ராமன், சீதை

ஓரிடத்தில் வீதியில் ஒரு பஜனைக் குழு நாம சங்கீர்த்தனம் செய்தபடி சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்து ஒருவர் எள்ளி நகையாடினார். இதைக் கண்டித்த ஞானி, ”ஒரு முறையாவது உள்ளத்தில் அன்புடன் இந்த பாட்டைப் பாடிப் பார். இந்த ‘ராம’ நாமத்தையாவது சொல்லிப் பார். எக்காலத்திலும் இதை விற்கக் கூடாது” என்றார்.

அவரும் சொல்லிப் பார்த்தார். ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. காலப்போக்கில் அவரது காலம் முடிந்தது. அவரது ஆத்மா, யமதர்ம ராஜர் முன் நிறுத்தப்படுகிறது. பாவ, புண்ணிய கணக்குகள் சரி பார்க்கப்படுகின்றன.

அதில் இவர் ஒருமுறை ‘ராம’நாமாவை சொன்னது தெரிய வருகிறது. “ராம நாமா சொல்லியிருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும்… எதாவது கேள்” என்கிறார் யமதர்ம ராஜர்.

அதற்கு அந்த நபர், “இதைத் தான் விற்கக் கூடாதுன்னு சொன்னாரே…. அதனால் இதுக்கு விலை இருக்கறா மாதிரி தெரியலை… நீங்களே பார்த்து ஏதாவது செய்யுங்கள்” என்கிறார்.

“இதுக்கு நான் எப்படி மதிப்பு போடறது… வா… இந்திரன்கிட்ட போகலாம்” என்கிறார் யமதர்ம ராஜர். தான் வரவேண்டும் என்றால், தனக்கு பல்லக்கு வேண்டும். அதில் தன்னை வைத்து யமதர்ம ராஜரும் ஒருவராக இருந்து சுமந்து வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் அந்த நபர்.

யமதர்ம ராஜரும் அதற்கு உடன்பட்டு, அவரை பல்லக்கில் தூக்கிக் கொண்டு இந்திரன் முன்னர் நிறுத்துகிறார். இந்திரனும் இதற்கு தகுதியான நபர் பிரம்மதேவர்தான் என்று கூறி, அவர்களை பிரம்ம தேவரைக் காண அழைக்கிறான்.

இப்போது அந்த நபர், ”நான் அமர்ந்திருக்கும் பல்லக்கை, இந்திரனும் சேர்ந்து தூக்க வேண்டும்… அப்போதுதான் நான் வருவேன்” என்று மீண்டும் நிபந்தனை விதிக்கிறார்.

இந்திரன் அதற்கு உடன்பட்டு, பல்லக்கை சுமந்து பிரம்மதேவர் முன்னர் நின்றபோது, பிரம்மதேவர், இதுகுறித்து பரந்தாமனையே கேட்டு விடலாம் என்கிறார்.

இப்போது பிரம்மதேவரும் பல்லக்கு சுமக்கும்படி ஆயிற்று. பரந்தாமன் முன்னர் சென்றதும் அவர் ஆச்சரியப்பட்டு, “யார் இவர்.. இவரை ஏன் இந்திரன், யமதர்ம ராஜர், பிரம்ம தேவர் மூவரும் சுமந்து வருகிறீர்கள்?” என்று கேட்கிறார்.

அதற்கு மூவரும், “இவர் ஒரு முறை ராம நாமா சொல்லியுள்ளார்.. அதற்கு என்ன பலன் என்று நீங்கள் சொல்ல வேண்டும்” என்றனர்.

“இந்த ஜீவனை, நீங்கள் மூவரும் சுமந்து வருகிறீர்களே… இதிலிருந்தே ராம நாமாவின் மகிமை உங்களுக்குப் புரிந்திருக்கும்” என்று கூறி, அந்த ஆத்மாவை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார் மகா விஷ்ணு.

ராம ராம ராம ராம!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE