வருடம் முழுவதும் வெடிச்சத்தம்... தினமும் இங்கே ஆன்மிக தீபாவளி!

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் உள்ள வெட்டுவெந்நி கண்டன் சாஸ்தா கோயிலில் வருடம் முழுவதுமே தீபாவளி வெடிச் சத்தம்தான். காரணம் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனையையும், பிரார்த்தனையும் வெடி வெடித்தே செலுத்துகின்றனர். அதுவும் இன்று, நேற்றல்ல பாரம்பரியமாகவே இது நடைபெற்று வருகின்றது.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், மார்த்தாண்டம் கடந்து வெட்டுவெந்நிக்குள் நுழைவதன் அடையாளமாய் வெடிக்கின்றது அந்த சத்தம். அடுத்த, அடுத்த சில நிமிட இடைவெளிகளில் தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலை இது. கேரளம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், தமிழக எல்லைக்குள் உள்ள இக்கோயிலின் முன்பு நிறுத்தி, வெடி வெடிக்க தங்களது நேர்த்திக்கடனாக பணத்தை செலுத்திச் செல்கின்றனர். கேரள மாநிலத்தில் பல கோயில்களிலும், குமரி மாவட்டத்தில் சில கோயில்களிலும் வெடி வழிபாடு உண்டு. ஆனால், வெட்டுவெந்நி ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் நடை திறந்திருந்தாலும், மூடியிருந்தாலும் 24 மணி நேரமும் வெடி வெடித்து வழிபாடு செய்வதுதான் அதன் சிறப்பு.

வெடி வைக்கும் கோயில் பணியாளர்

இதுகுறித்து ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயில் மேலாளர் சுரேஷ் கூறும்போது, ’’இந்தக் கோயில் இந்தப் பகுதியில் உள்ள 5 பழமையான நாயர் சமுதாயக் குடும்பங்களின் சொத்து. தேவ பிரசன்னம் பார்த்ததில் இந்த கோயில் 800 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இங்குள்ள மூலவர் ஸ்ரீ கண்டன் சாஸ்தா சுயம்பு வடிவம். அதாவது தானாகவே தோன்றியவர். இதுபோக கோயிலில் கணபதி, முருகன், சரஸ்வதி, நாகராஜர், நவக்கிரகம், பகவதி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளது.

இந்தக் கோயிலில் விநாயகர் சதுர்த்தி, மண்டல பூஜை, மகர ஜோதி விளக்கு, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கிய விழாக்கள். இதில் பங்குனி உத்திரம் 5 நாள்கள் கொண்டாடப்படும். இங்கு வெடி வழிபாடு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கத்தில் இருக்கின்றது. சாஸ்தாவுக்கு ஒரு காது மந்தம். அதனால் நம்முடைய கோரிக்கைகளை வெடி வைத்து, அதன் பின்னணியில் அவர் கவனத்தை ஈர்த்துத் தெரியப்படுத்தவே இங்கு வெடி வைக்கப்படுவதாக எங்கள் முன்னோர்கள் சொல்லி, ஒரு செவி வழிச் செய்தியும் புழக்கத்தில் உள்ளது. இதேபோல் தொற்று நோய் பரப்பும் கிருமிகளை இந்தக் கரும்புகை அழிக்கும் என்பதாலேயே, வெடி வழிபாடு வந்ததாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. இங்கு வருடம் முழுவதும், 24 மணி நேரமும் வெடி வைக்கப்படுகின்றது.

ஒரு வெடிக்கு 3 ரூபாய் கட்டணம். அரசிடம் அனுமதி வாங்கி நாங்களே இந்த வெடியை தயார் செய்கிறோம். ஒரு நாளுக்கு இங்கு குறைந்தது 1000 வெடிவரை வெடிக்கும். பலர் தங்களது வேண்டுதலாக 101 வெடி வைப்பது, 1001 வெடி வைப்பது என்றெல்லாம் நினைத்து, அது நடந்ததும் வெடிக்கின்றனர். இந்த வெடி வழிபாடுக்கு என தனி இடமும் வசதியாக கோயிலின் ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆண்டு முழுவதும் பட்டாசு சத்தம் கேட்கும் வெட்டுவெந்நி, இந்த தீபாவளித் திருநாளின் வெடிச்சத்தத்துக்கு மத்தியிலும் தனித்துத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE