சமயம் வளர்த்த சான்றோர் – 44: ஸ்ரீ பத்ராசல ராமதாசர்

By கே.சுந்தரராமன்

இயலிசை அறிஞராக விளங்கி, ராமநாமத்தின் வழியே பக்தி மார்க்கத்தை உருவாக்கியவர் ஸ்ரீ பத்ராசல ராமதாசர். எத்தனை துன்பங்கள் வந்தபோதும் ராமபக்தியை விடாது பின்பற்றி, ராமபிரானின் திருவடிகளே மோட்சத்தை அருளவல்லது என்பதை வலியுறுத்தியவர் அவர்.

ஆந்திர மாநிலத்தில் கோல்கொண்டா பல்லம் என்ற ஊரில், லிங்கண்ணா – காமாம்பாள் தம்பதி வசித்துவந்தனர். பல தான தர்மங்களைச் செய்து, பல தலங்களுக்குச் சென்று திருமாலை வழிபட்ட இவர்களுக்கு 1603-ல் கோபண்ணா என்ற மகன் பிறந்தார். லிங்கண்ணாவுக்கு கிராமத்தில் முன்னோர் விட்டுச்சென்ற சொத்துகள் இருந்தன. கோபண்ணாவின் மாமன்மார்கள் (அக்கண்ணா, மாதன்னா) இருவரும், அப்போது ஹைதராபாத்தில் இருந்து ஆட்சி புரிந்த அபுல்ஹாசன் தானீஷா என்ற நவாப்பின் அரசவையில் அமைச்சர்களாக இருந்தனர்.

சிறுவயது முதலே ராமபிரானிடத்தில் தீராத பக்தி கொண்டிருந்தார் கோபண்ணா. ராமாயண சொற்பொழிவுகள் கேட்டு, ராமநாம சங்கீர்த்தன பஜனையில் ஈடுபட்டு மகிழ்ந்தார் கோபண்ணா. அவ்வப்போது பக்தி நூல்களையும் வாசித்துவந்தார். பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார். தக்க பருவத்தில் கோபண்ணாவுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ராமர் பத்ராசலம்

ராமாயணத்தின் தாக்கம்

கோல்கொண்டா பல்லத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்ற ராமாயண சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த கோபண்ணா, தன்னை ராமாயணத்தில் ஒரு கதாபாத்திரமாகவே நினைத்துக்கொண்டார். மந்தரை, கைகேயி போன்ற கதாபாத்திரங்களை நினைத்து மனம் கொதித்தார். ராமாயண காலத்தில் ஒரு குரங்காகவாவது பிறந்து, ராமபிரானுக்கு சேவை செய்யும் பேறு பெறாமல் இருக்கிறோமே என்று வருந்தினார். எந்நேரமும் ‘ராம்... ராம்’ என்று ராம நாமத்தைக் கூறத் தொடங்கினார். கோபண்ணா எந்நேரமும் ராம நாமத்தைக் கூறியபடி பக்தியோடு இருப்பதைப் பார்த்து பெற்றோர், ஊர் மக்கள் அனைவரும் பெரிதும் மகிழ்ந்தனர்.

நோய்வாய்ப்பட்டு லிங்கண்ணாவும், கணவரது மறைவைத் தாளாது காமாம்பாளும் இறைவனடி சேர்ந்தனர். விரக்தியில் இருந்த கோபண்ணா, ராமபக்தியே என்றும் நிலையானது என்று உணர்ந்து ராமபிரான் விக்கிரகத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, ராமநாம ஜபத்தில் ஈடுபடலானார்.

ராமர் பத்ராசலம்

கபீர்தாசர் வருகை

இஸ்லாமியரான கபீர்தாசர் என்ற பிரம்மஞானி, ராமபக்தியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். எப்போதும் ‘ராம்... ராம்’ என்று கூறியபடி நெசவுத் தொழில் செய்து வந்தார். ராமபிரான் மீது பாடல்கள் புனைந்து மகிழ்ந்தார். அனைத்துப் பொருட்களிலும், அனைவரிடத்தும் ராமபிரானைக் கண்டார். கைகளில் தம்பூரா, சப்ளாக்கட்டை ஏந்தியபடி ராமநாமக் கீர்த்தனைகளை பாடியபடி, காசி நகரத்தில் இருந்து ராமசேதுவை நோக்கி புறப்பட்டார் கபீர்தாசர்.

பயணத்தின் நடுவே கோபண்ணா இருக்கும் கிராமத்தை, கபீர்தாசர் கடக்கும்போது, அவரது ராமநாமக் கீர்த்தனைகளைக் கேட்ட கிராம மக்கள், அவரைப் பின்தொடர்ந்தனர். கோபண்ணா அந்த கிராமத்தில் இருப்பதை அறிந்த அவர், கிராம மக்களிடம் கோபண்ணா குறித்து வினவினார். அவர்களிடம் கோபண்ணாவின் முகவரிக் கேட்டறிந்து, அவரது இல்லத்துக்கே சென்றார்.

கோபண்ணாவிடம் விளையாட நினைத்த கபீர்தாசர், அவரது பூஜைப் பெட்டியை எடுத்து குளத்தில் வீசினார். மறுநாள் காலை நீராடச் செல்லும் சமயம் பூஜைப் பெட்டியைக் காணாது தவித்தார் கோபண்ணா.

ஏதும் அறியாதவர்போல், கோபண்ணாவிடம், “இன்னுமா பெற்றோர் மறைந்ததை நினைத்து வருந்துகிறீர்கள்?” என்று வினவினார் கபீர்தாசர். கோபண்ணா, அவரை வரவேற்று, அவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார். இதற்கெல்லாம் வருந்த வேண்டாம் என்று கூறிய கபீர்தாசர், 3 முறை ராமநாமத்தைக் கூறி, ராமபிரான் விக்கிரகத்தை மீட்டுக்கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, கோபண்ணா, “ஸ்ரீதசரத ராமா, ஸ்ரீஜானகி ராமா, ஸ்ரீபக்த அனுக்கிரக ராமா” என்று அழைத்தார். ஆனால் ராமபிரான் விக்கிரகம் வரவில்லை. பல ஆண்டுகளாக ராமநாம ஜபம் செய்துவந்தாலும், தக்க குருநாதரிடம் இருந்து மந்திர உபதேசம் பெறாததால், ராமபிரான் விக்கிரகத்தை, கோபண்ணாவால் மீட்க முடியவில்லை.

கபீர்தாசர் ஒருமுறை, “ஜெய் ஸ்ரீராம்” என்று அழைத்ததும், குளத்தில் இருந்து பூஜைப் பெட்டி மேலே வந்தது. குருநாதர் வழியே மந்திர உபதேசம் பெற வேண்டும் என்று கோபண்ணாவுக்கு அறிவுறுத்திய கபீர்தாசர், அவருக்கு மந்திர உபதேசம் செய்துவைத்தார். அதன்பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

உயிர் பெற்ற குழந்தை

கோபண்ணாவுக்குத் திருமணம் செய்விக்க எண்ணிய அவரது உறவினர்கள், அவருக்கு சரஸ்வதி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர். கணவருக்கு ஏற்ற மனைவியாக இருந்து, ராமபக்தர்களுக்கு உணவிட்டு மகிழ்ந்தார் சரஸ்வதி. கோபண்ணா – சரஸ்வதி தம்பதிக்கு சுந்தரம் என்ற மகன் பிறந்தான்.

குழந்தைக்கு 2 வயதாகும் சமயத்தில், ஸ்ரீராமநவமி உற்சவத்தை சிறப்பாகச் செய்ய எண்ணினார் கோபண்ணா. அதன்படி மேளதாளங்கள் முழங்க, ராமபிரானுக்கு ஸ்ரீராமநவமி உற்சவம் செய்விக்கப்பட்டது. அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. வெகுநேரமாகக் குழந்தையைக் காணாது இருந்த சரஸ்வதி, ஏதோ வேலையாக இல்லத்தின் பின்புறம் வந்தார். அப்போது சாதத்தில் இருந்து வடித்த கஞ்சியைச் சேமித்து வைத்த தொட்டியில் குழந்தை மிதப்பதைக் கண்டார். கனத்த இதயத்துடன், குழந்தையின் சடலத்தை அப்புறப்படுத்தி, மறைவாக ஓரிடத்தில் வைத்தார். இதுகுறித்து கணவரிடமும் ஏதும் கூறவில்லை.

அனைவரும் உணவருந்திவிட்டு, கோபண்ணா தம்பதியை வாழ்த்திவிட்டுச் சென்றனர். கணவரை அழைத்து விஷயத்தைக் கூறினார் சரஸ்வதி. கோபண்ணா உடனே ராமபிரானை நினைத்து, “ரகுகுல திலகா, சீதாராமா, தசரத ராமா” என்று அழைத்தார். குழந்தை தூக்கத்தில் இருந்து எழுவதைப்போல எழுந்து வந்தான். சரஸ்வதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

ராமர் பத்ராசலம்

ராம தரிசனம்

கபீர்தாசரை நினைத்தார் கோபண்ணா. உடனே, கபீர்தாசர் அவர் முன்னர் வந்து நின்றார். தன்னை அழைத்ததன் காரணம் கேட்டார் கபீர்தாசர். ராமபிரான் தரிசனம் வேண்டி அவரை அழைத்ததாக கோபண்ணா கூறினார். மறுநாள் ராமபிரான் தரிசனம் கிடைக்கும் என்று அருளினார். ஆனால், ராமபிரானுக்கு இதில் உடன்பாடு இல்லை. தன்னை தரிசனம் செய்யும் பக்குவம் கோபண்ணாவுக்கு வரவில்லை என்று ராமபிரானுக்குத் தோன்றியது.

ஆனாலும் கபீர்தாசரின் வாக்கை ஏற்று எருமை ரூபத்தில் கோபண்ணாவுக்குக் காட்சியளித்தார் ராமபிரான். ராமபிரானைக் காணக் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் எருமையைக் கண்டதும் அதைத் தாக்கத் தொடங்கினர். கோபண்ணாவும் தன் பங்குக்கு எருமையைத் தாக்கினார். எருமை வடிவத்தில் வந்தது ராமபிரான்தான் என்று கபீர்தாசர் கூறியதும், தன் செயலுக்கு வருந்தினார் கோபண்ணா.

ராமர் பத்ராசலம்

அன்னதானம், கோயில் திருப்பணிகள், திருவிழாக்கள், ஏழை எளியோருக்கு உதவி என்று பொருளை வாரி வழங்கியதில், முன்னோர் விட்டுச்சென்ற சொத்துகள் அனைத்தும் தீர்ந்தன. கோபண்ணா வறுமையில் தவித்தார். மனைவியின் ஆலோசனையின் பேரில், தனது மாமன்மார்கள் பணிபுரியும் நவாப்பிடம் பணி கேட்டுச் செல்கிறார் கோபண்ணா.

அரசவைக்குச் சென்று அவர்களை சந்திக்கிறார் கோபண்ணா. அப்போது பத்ராசலம் தாலுகா தாசில்தார் பணிக்கு தகுதியான நபரைத் தேர்ந்தெடுப்பது குறித்து, அரசவையில் ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். கோபண்ணா அப்பதவிக்குத் தகுதியானவர் என்று தீர்மானிக்கப்பட்டு, அவர் அப்பதவியில் அமர்த்தப்படுகிறார்.

ராம பத்ர கோயில்

விஷயம் அறிந்து கோபண்ணாவின் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். கோபண்ணா பதவியேற்ற பிறகு, மக்கள் சரியாக வரிப்பணத்தைக் கட்டினர். நவாப், அக்கண்ணா, மாதண்ணா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒருநாள் இரவு, கோபண்ணாவின் கனவில் தோன்றிய ராமபிரான், தான் பத்ராசல மலையின்மீது குளிரிலும் வெயிலிலும் அகப்பட்டு, பூஜைகள் இன்றி வாடுவதாகக் கூறுகிறார். இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கோபண்ணா, தலைமைக் குமாஸ்தா திம்மாஜி, ஸ்தபதி யசோதவர்மா ஆகியோரை அழைத்து, அவர்களுடன் பத்ராசலம் புறப்படுகிறார். மலைக்கோயில் கட்ட தீர்மானித்திருப்பதாகக் கூறுகிறார். கோயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு செய்ய ரூ.6 லட்சம் பொற்காசுகள் ஆகும் என்று தெரியவந்தது. அதன்படி தலைமைக் குமாஸ்தா தடுத்தும் கேட்காமல், தாசில் கருவூலத்தில் இருந்த பணத்தை, ஸ்தபதியிடம் அளித்தார் கோபண்ணா.

அனைத்தும் சிறப்புற நடந்தேறி, கோயில் குடமுழுக்கும் இனிதே நிறைவு பெற்றது. தாசில்தார் கோபண்ணாவை அனைவரும் ‘பத்ராசல ராமதாசர்’ என்றே அழைத்தனர்.

ஸ்ரீ பத்ராசல ராமதாசர்

விடுதலைக்கு உதவிய ராமபிரான்

கடந்த ஒரு வருடமாக பத்ராசலம் தாலுகா கருவூலத்திலிருந்து வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த அமைச்சர்கள், இதுகுறித்து அக்கண்ணா, மாதண்ணாவிடம் தெரிவித்தனர். அரசு பணத்தை வைத்து கோபண்ணா, கோயில் கட்டியதை அனைவரும் அறிந்தனர். கோபண்ணா ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ராமபிரானை நினைத்து, அவருக்கு அன்றாட பூஜை செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார் கோபண்ணா. சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட அரிசியும் உப்பும் சம அளவில் சேர்க்கப்பட்ட உணவை, ராமநாமம் சொன்னபடி உண்டார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், அல்லும் பகலும் ராமபிரானை நினைத்து கீர்த்தனைகள் பாடியபடி இருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, ராமபிரானும் லட்சுமணனும் சேவகர்கள் போல் வேடமிட்டு, கோபண்ணாவின் மனைவி கொடுத்தனுப்பியதாக, ரூ.6 லட்சம் பொற்காசுகளை, நவாபிடம் அளித்தனர். கோபண்ணா விடுதலை செய்யப்பட்டார்.

தனக்கு அனைத்தையும் உணர்த்தியது ராமபிரானும் லட்சுமணனும்தான் என்பதை நவாப்பும் உணர்கிறார். சேவகர்கள் கொடுத்த பொற்காசுகளை, கோபண்ணாவிடமே கொடுத்துவிடுகிறார். அவற்றைக் கோயில் கருவூலத்தில் சேர்த்தார் கோபண்ணா.

பத்ராசல ஜெயந்தி விழா

பத்ராசல ராமதாசர் என்று அனைவராலும் புகழப்பட்ட கோபண்ணா, பல ஆண்டுகள் வாழ்ந்து ராமபிரான் மீது கீர்த்தனைகள் பல இயற்றினார். இப்போதும் பல இடங்களில் பத்ராசல ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு, அவரது கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE