திருப்பதி பிரம்மோற்சவம்: தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

By என். மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று, தீர்த்தவாரி (சக்கர ஸ்நானம்) உற்சவம் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா கட்டுப்பாடுகளால் இம்முறை ஏகாந்தமாக மாடவீதிகளில் வாகன சேவைகள் இன்றி நடத்தப்பட்டது.

பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை, இரவு ஆகிய 2 வேளையிலும் கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஏகாந்தமாக வாகன சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தேவஸ்தான ஜீயர்கள், உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிரம்மோற்சவத்தின் நிறைவுநாளான இன்று காலை, கோயிலுக்குள் அமைக்கப்பட்ட திருக்குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின்படி நடத்தப்பட்டன. இதை முன்னிட்டு, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், சக்கர ஸ்நான நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குடும்பத்துடன் கலந்துகொண்டார். மேலும், ஜீயர்கள், அதிகாரிகளும், அர்ச்சகர்களும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று இரவு கொடி இறக்க நிகழ்வும் நடத்தப்பட்டு, 9 நாட்கள் நடைபெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவுபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE