சமயம் வளர்த்த சான்றோர் – 42: ஸ்ரீ நாராயண தீர்த்தர்

By கே.சுந்தரராமன்

ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நாட்டிய நாடகத்தைப் பெருமாள் முன்னிலையில் இயற்றி, அவருடன் பேசியவாறு, காலில் சலங்கை கட்டிக்கொண்டு, கண்ணன் புகழ் பாடியபடியும் ஆடியபடியும் தரங்கங்கள் மூலம் நாம சங்கீர்த்தன மகிமையையும் பஜனை சம்பிரதாயத்தையும் தென்னாட்டில் பரப்பியவர் ஸ்ரீ நாராயண தீர்த்தர். சங்கீத மும்மூர்த்திகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இவர்.

ஆந்திர மாநிலத்தின் குண்டூருக்கு அருகில் உள்ள வில்லத்தூர் என்ற கிராமத்தில், தல்லவல்லறா என்ற தெலுங்கு அந்தண குலத்தைச் சேர்ந்த நீலகண்ட சாஸ்திரி – பார்வதி அம்மாள் தம்பதி வசித்துவந்தனர். இவர்களுக்கு 1675-ல் கோவிந்தன் என்ற மகன் பிறந்தான். பிறகு, மங்களகிரிக்கு அருகே உள்ள காஜா கிராமத்தில் நீலகண்ட சாஸ்திரியின் குடும்பம் வசிக்கத் தொடங்கியது.

சிறுவயதிலிருந்தே, வேதம், சாஸ்திரங்களை முறையாகக் கற்க, வாசுதேவ பண்டிதரிடம் அனுப்பப்பட்டார் கோவிந்தன். வேதாந்த சாஸ்திரங்கள், சம்ஸ்கிருத மொழி, கர்னாடக இசை ஆகியவற்றில் புலமை பெற்றார் கோவிந்தன். இதன்காரணமாக, கோவிந்தனுக்கு ஆத்மஞானப் பற்று ஏற்பட்டது. தக்க பருவம் அடைந்ததும், தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கிருஷ்ணா நதிக்கரையின் அக்கரையில் உள்ள வேதாத்ரி கிராமத்தைச் சேர்ந்த உச்சம்மா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் கோவிந்த சாஸ்திரி.

வாழ்வை மாற்றிய தருணம்

ஒருசமயம் ஒரு நோன்புக்காக, தன் பிறந்த வீட்டுக்குச் சென்றார் உச்சம்மா. கோவிந்த சாஸ்திரி பின்னர் தனியாகப் புறப்பட்டார். சாலை வழியாகப் பாலம் தாண்டி செல்வது சுற்றுப்பாதை என்பதால், குறுக்கே கிருஷ்ணா நதியை நீந்தியே கடந்து விடலாம் என்று நதியில் கோவிந்த சாஸ்திரி இறங்கினார். ஆனால் நீரோட்டத்தின் வேகத்தை தாங்க முடியாமல், இழுத்துச் செல்லப்பட்டார்.

இனி பிழைப்பது கடினம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, உயிர் போவதற்குள் சந்நியாசம் வாங்கிக்கொள்வோம் என்று நினைத்து, ‘ப்ரைஷ உச்சாரணம்’ (சந்நியாச முறை) செய்து, ஆத்ம தியானத்தில் லயித்தார். நீரோட்டத்தின் வேகம் தணிந்து, ஒரு புதர் அருகே ஒதுக்கப்பட்டார். சுய நினைவுக்கு வந்து, மாமனாரின் இல்லத்துக்குச் சென்றார். கணவரது கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உச்சம்மா, “இதென்ன சந்நியாச வேஷம்” என்று கணவரை வினவுகிறார். “இது வேஷமல்ல. உண்மைதான்” என்று பதிலளிக்கிறார் கோவிந்த சாஸ்திரி.

காசியை நோக்கிப் பயணம்

வேதாத்ரி கிராம நரசிம்ம சுவாமி கோயிலுக்கு அருகே ஒரு சிறிய குகை இருந்தது. அங்கு சென்று அமர்ந்து, நரசிம்ம சுவாமியை மனதில் இருத்தி, 12 ஆண்டுகள் தவம் இருந்தார் கோவிந்த சாஸ்திரி. ஒருநாள் உலக சிந்தனை வந்ததும், தனக்கு ஆத்ம ஞானம் சித்திக்கவில்லை என்று வருத்தம் அடைந்தார். அப்போது அவரை காசி நகருக்குச் செல்லுமாறு ஓர் அசரீரி கேட்டது.

அசரீரி வாக்கின்படி காசி நகருக்குச் சென்று, காசி விஸ்வநாதர் கோயிலின் பின்புறம் உள்ள முக்தி மண்டபத்தில் நடைபெறும் வேதாந்த விவாதத்தில் கலந்துகொண்டார். கோவிந்த சாஸ்திரியின் விவாதத் திறமை, அனைவராலும் போற்றப்பட்டது. சிவராமாநந்த தீர்த்தர் என்ற மகான், கோவிந்த சாஸ்திரியை அழைத்து காசி நகர் வந்ததன் நோக்கம் குறித்து வினவினார்.

கோவிந்த சாஸ்திரி அவரிடம், “சந்நியாசம் ஏற்றுக்கொண்டாலும் ஆத்ம ஞானம் கிட்டவில்லை. அதற்கு அருள் செய்ய வேண்டும்” என்றார். “ஆதி சங்கரரின் ‘பிரபோத சுதாகரம்’ என்ற கிரந்தத்தைப் படித்தால், தெளிவான ஞானம் பிறக்கும்” என்று அருளிய சிவராமாநந்த தீர்த்தர், பின்னர் கோவிந்த சாஸ்திரிக்கு முறைப்படி சந்நியாச தீட்சை அளித்து, ‘நாராயண தீர்த்தர்’ என்ற தீக்‌ஷா நாமம் சூட்டினார். ‘பிரபோத சுதாகரம்’ நூலில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் வழியே பக்தி மார்க்கம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மேலும், சிந்தனையால் மனப்பக்குவம் பெற்றால், மனது சுத்தமாகும் என்றும் ஆத்ம ஞானம் தானாக வந்து சேரும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த நூலை ஒரேநாளில் படித்த நாராயண தீர்த்தர், ‘ஹரே கிருஷ்ணா, கோபாலா வாசுதேவ, கோபி ரமணா’ என்று அழைத்தபடியே குருநாதரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். நாராயண தீர்த்தரை பகவன் நாமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளப் பணித்தார் குருநாதர். அதற்காக கங்கைக் கரையை விட்டுவிட்டு, தென் நாட்டில் உள்ள காவிரிக் கரைக்குச் செல்ல வேண்டும் என்றும் அங்கு சென்று போதேந்திர சரஸ்வதி சுவாமிகளை சரணடைந்தால், அவரே நாராயண தீர்த்தருக்கு வழிகாட்டுவார் என்றும் கூறினார்.

மீண்டும் தென்னகம்

குருநாதரின் வழிகாட்டுதலின்படி, தென்னாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார் நாராயண தீர்த்தர். இடைவிடாது இறைவனின் நாமங்களைப் பாடிக்கொண்டே ப்ரயாகை, மதுரா, பூரி ஜகந்நாதம், குச்சிமஞ்சி, சோபநாத்ரி (மங்களகிரி) வேதாத்ரி, குச்சிபுடி, அத்தங்கி முதலிய தலங்களை தரிசித்துவிட்டு, திருப்பதி வந்தடைந்தார் தீர்த்தர்.

திருமலையில் வேங்கடேஸ்வரனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது, பங்காருவாசிலி கிணற்றருகே ஒரு சிறுவனைக் கண்டார். அவன் சிரிப்பது, பால கோபாலன் சிரிப்பது போன்று இருந்தது. அப்போது ஏற்பட்ட வயிற்று வலியையும் பொருட்படுத்தாது, உடனே மோகன ராகத்தில் ‘பால கோபால மாமுக்தர’ எனத் தொடங்கும் தரங்கத்தை ஜதியுடன் அமைத்துப் பாடினார் நாராயண தீர்த்தர். அரை மணி நேரம் கோபாலனை நினைத்துப் பாடியதில் வயிற்று வலி தெரியவில்லை. ஆனால் பாடி முடித்ததும் வலி தொடங்கியது.

வேதனையுடன் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு, கோவிந்தபுரம் நோக்கிப் பயணித்தார் நாராயண தீர்த்தர். ஆனால் அவர் கோவிந்தபுரம் வந்தடைவதற்குள், போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி அடைந்துவிட்டார். இதையடுத்து, ஏதேனும் நூல் கிடைக்கிறதா என்று திருவிசநல்லூர் சென்றார் நாராயண தீர்த்தர். ஆனால், அதற்கு முன்பாகவே ஸ்ரீதர அய்யாவாள் மஹாலிங்க சுவாமியின் ஜோதியில் கலந்துவிட்டார்.

வழிகாட்டிய வராகம்

நாராயண தீர்த்தர் சந்திக்க விரும்பிய இருவரும் மறைந்துவிட்டாலும் அவர்கள் இயற்றிய நூல்கள் கிடைத்தன. அதில் கூறப்பட்ட அறிவுரைகளின்படி, இறை நாமாக்களைக் கூறிக்கொண்டு, நடுக்காவேரியை வந்தடைந்தார் தீர்த்தர். திருப்பதி செல்ல வேண்டும் என்று நினைத்து உறங்கியபோது, வேங்கடேஸ்வரப் பெருமாள் தீர்த்தரின் கனவில் தோன்றி, “நீ கண்விழித்துப் பார்க்கும்போது எது தோன்றுகிறதோ, அதைப் பின் தொடர்ந்து சென்றால், எமது தரிசனம் கிடைக்கும்” என்று கூறினார்.

தீர்த்தர் கண்விழித்தபோது வராகம் (பன்றி) ஒன்று தென்பட்டது. அதைப் பின்தொடர்ந்து சென்றார். பூபதிராஜபுரம் (வரகூர் – வராகம் காட்டிய ஊர்) என்ற அக்ரஹாரத்தில் உள்ள பாழும் வீட்டருகே சென்று, அங்கிருந்து வராகம் மறைந்துவிட்டது. தீர்த்தர் அந்த பாழும் வீட்டருகே அமர்ந்து, பவுர்ணமி தினம் தொடங்கி வெங்கடேசரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு எட்டாவது நாள் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திர தினத்தில் வெங்கடேசரின் தரிசனம் கிடைத்தது.

ஊர் மக்களை அழைத்து, தான் அமர்ந்த இடத்தைத் தோண்டச் சொன்னார் தீர்த்தர். அந்த இடத்தில் நாராயணனின் சிலை மூர்த்தியும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய வெங்கடேசரின் பஞ்சலோக மூர்த்தியும் கிடைத்தன. ஊர் மக்கள், அங்கு கோயில் எழுப்பி, மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தனர்.

அப்போது, தீர்த்தர் முன்னர் காசியில் சந்தித்த சித்தேந்திர யோகி என்ற சீடர், வரகூர் வந்தடைந்தார். குச்சிபுடி கிராமவாசிகள் ஆடிய யக்‌ஷகான நடனத்தை, தான் முறைப்படுத்தியதைத் தீர்த்தரிடம் கூறினார் சித்தேந்திர யோகி. முறைப்படுத்தப்பட்ட யக்‌ஷகானத்தை அபிநயித்தும் காட்டினார். சீடரின் நடனத்தைக் கண்ட நாராயண தீர்த்தரின் மனதில் கிருஷ்ண லீலைகள் அலை அலைகளாக எழும்பி கீர்த்தனங்களாக அமைந்தன.

நாராயண தீர்த்தர் பாடிய பல பாடல்களில், சில பாடல்களுக்கு (ஜய ஜய ரமாநாத ஜய ஜய த்ராநாத ஜய ஜய வராஹபுர ஸ்ரீவெங்கடேச) பெருமாளின் கிங்கிணீ நாதம் கேட்டது. கிங்கிணீ நாதம் கேட்ட பாடல்களைத் தொகுத்து ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என்ற பாடல் தொகுப்பை அமைத்தார். அந்தப் பாடல்களில் சாந்தோக்ய உபநிஷத் கருத்துகள் உள்ளடங்கியுள்ளன. அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயடம், வசந்த திலகம் போன்ற 17 வகையான சந்தங்களைப் பயன்படுத்தி பல பாடல்களைப் புனைந்துள்ளார் தீர்த்தர்.

ராஸலீலைப் பாடல்

ஒருசமயம் வரகூரில் வரதராஜகவி என்பவர், தீர்த்தரின் பாடல்கள் சுவை குறைந்து காணப்படுவதாகக் கூறினார். இதைக் கேள்வியுற்ற தீர்த்தர், அன்று கோயிலுக்கு வராமல் ஆற்றங்கரையில் அமர்ந்து, ‘கலபகதி சோபகந காலமேகாப’ என்ற பாடலைப் பாடினார். வரதராஜகவி போன்று ராஸலீலைப் பாடல்களை அறியாத தீர்த்தர் அன்று ராஸலீலைப் பாடலைப் பாடினார்.

சித்திரை மாதம் ஸ்ரீராமநவமியின்போது ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி’ 12 சர்க்கங்கள் கொண்டு முழுமை பெற்றது. அடுத்த கோகுலாஷ்டமி விழாவின்போது, அனைவரும் தரங்கிணி பாடல்களைப் பாடும்படி செய்தார் தீர்த்தர். கிருஷ்ணர் கோயில்களில் உறியடி உற்சவத்தை நடைபெறச் செய்தார். தெலுங்கு மொழியில் ‘பாரிஜாதாபஹரணம்’ என்ற நாட்டிய நாடகத்தை எழுதினார். மொத்தம் 15 நூல்களை எழுதியுள்ளார்.

ஜீவசமாதி

வெகுநாட்கள் வரகூரில் இருந்துவிட்டு, பெருமாளின் அனுமதி பெற்று நடக்கலானார் நாராயண தீர்த்தர். திருப்பூந்துருத்தி வந்து காவிரிக் கரையில் ஒரு மாமரத்தருகே வந்தார். அங்கு கண்ணன் குழலூதி கோபியரோடு ஆடுவதைக் கண்டார். அதை நினைத்தபடி அங்கேயே தங்கிவிட்டார். 1745-ம் ஆண்டு மாசி மாதம் பவுர்ணமிக்குப் பிறகு வரும் அஷ்டமி தினத்தில், அந்த மரத்தருகே ஒரு குழி வெட்டச்செய்து அதில் இறங்கி ஜீவசமாதியில் நிலைத்துவிட்டார் தீர்த்தர்.

இப்போதும் ஆண்டு தோறும் பல்வேறு அமைப்பினர் இங்கு வந்து நாராயண தீர்த்தருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE