நாகூரில் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா தொடக்கம்

By கரு.முத்து

நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்காவில் அமைந்துள்ள சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்திபெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்குள்ள நாகூர் ஆண்டவரின் மகன் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகையின் சமாதியில் கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று விமர்சையாக தொடங்கியது. துல்ஹஜ்ஜூ பிறை என்பதால் அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டது. பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களையும், வேண்டுதல்களையும் நிறைவேறுவதற்காக காணிக்கை பொருட்களை தொட்டில் பந்தலில் கட்டினர்.

3 நாட்களுக்கு தர்ஹா உட்புறம் மவுலாது நடைபெற உள்ளது. நாளை மாலை சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு தர்ஹா அலங்கார வாசலில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. இந்த கந்தூரி விழா தொடக்க நிகழ்வில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு துவா செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE