குருவாயூர் ஏகாதசி

By கே.சுந்தரராமன்

ஒருமுறை குருவாயூர் சென்றபோது கேசவன் என்ற யானையைப் பற்றிச் சொன்னார்கள். நிலம்பூர் நாட்டு ராஜா ஒருவர் 1914-ல், தன்னிடம் இருந்த யானைகளில் ஒன்றை குருவாயூர் கோயிலுக்கு தானம் கொடுத்தார். அவன்தான் பத்து வயது நிரம்பிய கேசவன். எப்போதும் கண்ணனை நினைத்தபடியும் கோயிலைப் பார்த்தபடியே இருப்பான். ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்கப் பழகிக் கொண்டான்.

வீதியுலாவின்போது நன்றாக நடனம் ஆடுவான். முன்னும் பின்னும், வலம் புறம் – இப்படி அசைந்து அசைந்து நடை போடுவான். தான் குருவாயூரப்பனுக்காக மட்டுமே என்ற எண்ணம் ஆழப் பதிந்தது. வேறு ஊர் உற்சவங்களுக்கு அழைத்தால் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பான். வேறு யாருக்கும் அடி பணிய மாட்டான். குருவாயூரப்பன் கோயிலில் யார் திடம்பை (தட்டையான பலகையில் மாயோன் உருவம் பொறித்திருக்கும்) வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்கால்களை மடக்குவான்.

சில நாட்கள் கழித்து அவனுக்கு, ‘கர்வம் பிடித்த யானை’ என்ற பெயர் கிட்டியது. எந்த உற்சவத்துக்கும் கேசவனை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. கேசவன் ஒதுக்கப்பட்டான்.

1970-ம் ஆண்டு மார்கழி ஏகாதசி விளக்கு விழாவில் குருவாயூர் கோயிலில் தீ பிடித்தது. அப்போது கேசவன்தான் ஓடி வந்து மணல் மூட்டைகளைப் போட்டு குருவாயூரப்பனை காத்தான்.

அப்போதுதான் மக்கள் கேசவன் குருவாயூரப்பனைப் பிடித்ததால்தான் வேறு யாருக்கும் ஆதரவு தருவதில்லை என்பதை புரிந்து கொண்டார்கள். இதனால் கண்ணனைச் சுமக்கும் பாக்கியம் மீண்டும் கேசவனுக்குக் கிடைத்தது.

1971-ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று குருவாயூரப்பன் திடம்பை கேசவன் மீது ஏற்றியபோது கேசவன் தடுமாறினான். அதனால் திடம்பை வேறொரு யானைக்கு மாற்றி புறப்பாட்டை நிறைவு செய்தார்கள்.

கேசவனுக்கு மூச்சு இரைத்தது. இன்னொரு யானை மீது குருவாயூரப்பன் வலம் வருவதை கண்ணாரக்கண்டான். அப்படியே கண்ணனை சரண் புகுந்தான். பின்னாளில் கேசவனுக்கு 12 அடியில் சிலை வைத்தது கேரள அரசு.

கேசவா… கேசவா…

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE