சமயம் வளர்த்த சான்றோர் – 39

By கே.சுந்தரராமன்

சைவக் குரவர்கள் நால்வருள் ஒருவராகப் போற்றப்படும் திருஞானசம்பந்தர், தல யாத்திரை பல சென்று, சிவபெருமான் மீது பாடல்கள் புனைந்து சைவ சமயத்தைத் தழைக்கச்செய்தவர். மகன்மை நெறியில், ஈசனைத் தந்தையாகக் கொண்டு, தன்னைப் பிள்ளையாக பாவித்து, திருஞானசம்பந்தர் பாடியது, ‘சத்புத்திர மார்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர்

7-ம் நூற்றாண்டில், சோழநாட்டின் சீர்காழியில் வேதியர் குலத்தைச் சேர்ந்த சிவபாதர் - பகவதி தம்பதி வாழ்ந்துவந்தனர். இருவரும் தினமும் தோணியப்பர் கோயிலில் ஈசனுக்குத் தொண்டு புரிந்துவந்தனர். சிவபெருமான் அருளால், இவர்களுக்கு 644-ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. சிவபாதரும் பகவதியும், செல்வன் பிறந்த மகிழ்ச்சியில், ஊரில் உள்ள அனைவருக்கும் பொன்னும் பொருளும் அமுதும் கொடுத்து மகிழ்ந்தனர். பெருவிழா போல் சிவ வழிபாடுகள் செய்தனர்.

குழந்தைக்கு ‘சம்பந்தன்’ (ஆளுடையபிள்ளை) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 3-வது வயது தொடங்கும் காலத்தில், ஒருநாள் தனது தந்தை பொற்றாமரைக் குளத்தில் நீராடச் செல்வதைக் காண்கிறார் சம்பந்தர்.

திருஞானசம்பந்தர் முலைப்பால் விழா

தானும் நீராடச் செல்ல வேண்டும் என அடம்பிடித்து, அவருடன் பொற்றாமரை குளத்துக்குச் செல்கிறார். கரையோரம் சம்பந்தரை அமரச் செய்துவிட்டு, நீராடச் செல்கிறார் சிவபாதர். சிறிது நேரம் கழித்து, தந்தையைக் காணாது அழுகிறார் சம்பந்தர்.

குழந்தையின் அழுகுரல் கேட்ட சிவபெருமான், உமையம்மையை அழைத்து, குழந்தைக்குப் பாலூட்டும்படி கூறினார். அம்மையும் அவ்வாறே செய்தார். நீராடிவிட்டுத் திரும்பிய சிவபாதர், குழந்தையின் வாயில் பால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். “யார் உனக்குப் பால் கொடுத்தது?” என்று வினவினார்.

சம்பந்தர் உடனே, “தோடுடைய செவியன்” என்று பாடலாய் பாடிக்காட்டினார். நடப்பது அனைத்தும் தோணியப்பர் கருணை என்பதை உணர்ந்தார் சிவபாதர். சிவஞானப்பாலை உண்டதால், சம்பந்தருக்கு, ‘சிவஞான சம்பந்தர்’ என்ற பெயர் உண்டானது. ஞானப்பால் உண்ட தினம் முதல், சிவபெருமான் மீது பதிகங்கள் பாடத் தொடங்கினார் சம்பந்தர்.

திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா

சிவத்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்ய எண்ணினார் சம்பந்தர். ஒருநாள், தந்தையுடன் திருக்கோலக்கா தலத்துக்குச் சென்றார். கையால் தாளம் போட்டுக்கொண்டு, ‘மடையில் வாளையாய’ என்ற பதிகத்தைப் பாடினார். பிஞ்சுக்கரம் தாளம் போடுவதைப் பார்த்த செஞ்சடைவண்ணர், ஐந்தெழுத்து மந்திரம் எழுதப்பட்ட 2 பொற்தாளங்களை, சம்பந்தருக்கு அளித்தார்.

பக்திப் பெருக்கோடு, திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் சம்பந்தர். மீண்டும் சீர்காழி வந்து, தோணியப்பர் மீது 8 பதிகங்கள் பாடினார். சம்பந்தரின் இசை கேட்ட அன்பர்கள், தங்கள் ஊருக்கு வருமாறு அவரை அழைத்தனர். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, திருநனிப்பள்ளி, திருவலம்பரம் முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு சீர்காழி வந்தடைந்தார் ஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தரைப் பற்றி கேள்விப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர், தன் மனைவியுடன் வந்து, அவரை வணங்கி, சம்பந்தரின் பதிகங்களை யாழில் இசைத்து மகிழ்ந்தார். இவ்வாறு ஞானசம்பந்தர் தலங்கள்தோறும் சென்று பாடுவதும், உடன் சென்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழிசைப்பதும் தொடர்ந்தன.

திருஞானசம்பந்தர் மயிலாப்பூர்

ஒருசமயம், தில்லைத் தலத்துக்குச் செல்ல வேண்டும் என்று திருஞானசம்பந்தர் விருப்பம் கொண்டார். தந்தையார் தோளில் திருஞானசம்பந்தரைச் சுமந்தவாறு தில்லையை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் திருஞானசம்பந்தரைப் பூரணப் பொற்கலசங்கள் வைத்து வரவேற்றனர். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து, அம்பலவாணனை சேவித்து, திருப்பணிகள் மேற்கொண்டார். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியும் யாழிசைத்தபடி உடனிருந்தனர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வேண்டுகோளுக்கிணங்க, அவர் சொந்த ஊரான திருஎருக்கத்தம்புலியூர் சென்று, அத்தல ஈசனை வணங்கி திருப்பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். பின்னர் தருமபுரம் யாழ்முறிநாதர் கோயிலில் ‘மாதர் மடப்பிடியும்’ என்ற பதிகம் பாடி, பதிக இசை யாழில் அடங்காமையை, திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு எடுத்துரைத்தார்.

யாழ்முறிநாதர் கோயில்

எப்போதும் தந்தையார் தன்னைத் தோளில் சுமப்பதைக் கண்டு மனம் கலங்கிய திருஞானசம்பந்தர், தானே நடப்பதாகக் கூறி திருநெல்வாயில் தலத்தை நோக்கி நடக்கலானார். இரவு ஆகிவிட்டதால், அனைவரும் மாறன்பாடி தலத்தில் தங்கினர்.

திருஞானசம்பந்தர், திருநெல்வாயில் வரப்போவதை அறிந்த ஈசன், அவ்வூர் அடியார்களின் கனவில் தோன்றி, “எம்மை தரிசிக்க திருஞானசம்பந்தர் வரவிருப்பதால், அவரை ஏற்றி வருவதற்காக, முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்களை வைத்திருக்கிறோம். அவற்றை எடுத்துச் சென்று அவரை அழைத்து வருவீர்களாக” என்று பணித்தார்.

திருஞானசம்பந்தர் கனவிலும் தோன்றிய ஈசன், “யாம் உமக்கு மகிழ்ந்து அருளும் முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னங்களைப் பெற்றுக்கொள்வீராக” என்று அருளினார். பொழுது புலர்ந்ததும், அனைத்தையும் ஏற்ற திருஞானசம்பந்தர், அத்தலத்து ஈசன் மீது திருப்பதிகங்கள் பாடினார். சிலகாலம் திருநெல்வாயிலில் தங்கியிருந்து, திருப்பணிகளை மேற்கொண்டு மீண்டும் சீர்காழி வந்தடைந்தார்.

திருஞானசம்பந்தர் - சிதம்பரம்

திருஞானசம்பந்தருக்கு அவரது 7-வது வயதில் உபநயனம் செய்விக்க எண்ணினார் சிவபாதர். அதன்படி அந்நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார். உபநயன நாளில், மறையோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்துவைத்தார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தரைப் பற்றி கேள்வியுற்ற திருநாவுக்கரசர், சீர்காழி வந்து, அவரைச் சந்தித்து அளவளாவினார். மகிழ்ச்சி அடைந்த திருஞானசம்பந்தர், அவரை ‘அப்பரே!’ என்று அழைத்தார். இருவரும் சென்று தோணியப்பரைத் தரிசித்தனர்.

அங்கிருந்து திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்தார். அத்தல ஈசனை வழிபட்டுத் திரும்பும்போது, கொல்லி மழவன் என்னும் அரசனின் மகளைக் கண்டார். வலிப்பு நோயால் அவதியுறும் அப்பெண்ணை குணப்படுத்துவதற்காக, ‘துணிவளர் திங்கள்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். மழவன் மகளும் நோய் நீங்கி, சுய உணர்வு பெற்று எழுந்தார்.

திருஞானசம்பந்தர் திருப்பட்டீசுரம் தலத்துக்கு வரும்போது, இறைவன் திருவுள்ளம் கொண்டு, பூதகணங்கள் மூலம் அவருக்கு முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்கச் செய்தார். சீர்காழியில் யாகம் நடத்துவதற்காக, திருவாடுதுறை ஈசன், திருஞானசம்பந்தரின் தந்தையாருக்கு, ஒரு பீடத்தில் இருந்து எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் நிறைந்த ‘கிழி’ ஒன்றைக் கொடுத்தருளினார்.

திருநாவுக்கரசருடன் இணைந்து பல தலங்களுக்குச் சென்றார் திருஞானசம்பந்தர். திருவீழிமிழலையில் கடும் பஞ்சம் நிலவிய தருணத்தில், சிவபெருமான் இருவரது கனவிலும் தோன்றி சிவலிங்கத்தின் மீது இருவருக்கும் தலா ஒரு காசு வைப்பதாகக் கூறி அவ்வாறே செய்தார். இருவரும் அக்காசு பெற்று அடியவர்களுக்கு அமுதளித்து மகிழ்ந்தனர்.

திருமறைக்காடு தலத்தில் நுழைவாயில் கதவு வெகுநாட்களாக மூடப்பட்டிருந்தது. இருவரும் தினம் பதிகம் பாடி, அக்கதவு திறந்து மூடுமாறு முடிவெடுத்து, அவ்வாறே அதைச் செயல்படுத்தினர்.

சீர்காழி கோயில்

சமணர்களை வெற்றிகொள்ள மதுரை நோக்கி யாத்திரை மேற்கொண்டார் திருஞானசம்பந்தர். மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, திருப்புவனம் தலத்தருகே வைகை ஆற்றின் வடகரையை வந்தடைந்தார். ஆற்றில் கால்வைக்க முயன்றபோது, ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. அங்கிருந்தபடியே ‘தென் திருப்பூவனமே’ என்று முடியும் பதிகத்தைப் பாடினார். பதிகம் கேட்டு மகிழ்ந்த ஈசன், நந்திதேவரைச் சாய்ந்திருக்கும்படி பணித்தார். இன்றும் திருப்புவனத்தில், நந்திதேவர் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

பாண்டிய மன்னர் நெடுமாறன் சமண சமயம் சார்ந்து இருப்பதை, மங்கையர்க்கரசி குலச்சிறையார் வாயிலாக அறிகிறார் திருஞானசம்பந்தர். மதுரையை நோக்கிப் பயணித்த அவர், நாளும் கோளும் நன்மை பயக்காது இருந்தாலும், உமையொரு பாகன் விருப்பத்தால், ‘அவை நல்ல நல்ல’ என்று கோளறு திருப்பதிகம் பாடினார். சமண மதத்தைத் தழுவிய பாண்டிய மன்னர் நின்றசீர் நெடுமாறனை, சைவ மதத்தைத் தழுவச் செய்தார்.

இதுகண்டு பொறுக்காத சிலர், திருஞானசம்பந்தர் தங்கியிருந்த இடத்துக்குத் தீயிட்டனர். தீயின் வெப்பம் திருஞானசம்பந்தரைத் தாக்காது, மன்னரை வெக்கை நோயாகத் தாக்கியது. திருஞானசம்பந்தர், திருநீற்றை அவர் மீது பூசி, திருநீற்றுப் பதிகம், பச்சைப் பதிகம் பாடியதும், மன்னர் அந்நோயிலிருந்து மீண்டெழுந்தார். பின்னர் வாதப்போரில் சமணர்களை வெற்றி கண்டார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தரின் அற்புதங்களைக் கேள்வியுற்ற மயிலாப்பூர் சிவநேசர், தனது மகள் பூம்பாவையை அவருக்கு மணமுடிக்க எண்ணினார். ஆனால், ஒருநாள் பூப்பறிக்கச் செல்லும்போது, அரவம் தீண்டி பூம்பாவை இறந்தார். அவரது உடல் எரியூட்டப்பட்டது. ஆனால், சாம்பலை நீரில் கரைக்க மறுத்துவிட்டார் சிவநேசர்.

திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்திருந்தார் சிவநேசர். அவர் எதிர்பார்த்தபடி ஒருநாள் திருஞானசம்பந்தர், சிவநேசர் இருக்கும் இடத்துக்கு வந்தார். பூம்பாவையை உயிர்ப்பித்தார். ஆனால், அவரை மணப்பதற்கு மறுத்துவிட்டார். பூம்பாவையை உயிர்ப்பித்ததால், அவருக்கு தான் தந்தை முறை என்று கூறினார்.

பின்னர், திருநல்லூரிலுள்ள நம்பியாண்டார் நம்பியின் புதல்வியை மணந்தார். ஆனால், ஈசனைச் சேரும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த திருஞானசம்பந்தர், மணக்கோலத்துடனேயே, மணப்பெண்ணுடன் ஆச்சாள்புரம் கோயிலுக்குச் சென்று, வைகாசி மூல நட்சத்திர தினத்தில் சிவஜோதியில் கலந்தார். அங்கிருந்த அனைவரும் ஈசனது திருவடி நிழலை அடைந்தனர்.

220 தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி, தனது 16-வது வயதில் (660-ம் ஆண்டு) சிவஜோதியில் கலந்த திருஞானசம்பந்தரின் வரலாற்றை, பெரிய புராணத்தில் 1,256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் விரித்துரைத்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது தேவாரப் பதிகங்களில், திருஞானசம்பந்தரின் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரின் 384 பதிகங்கள், பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் 16,000 பதிகங்கள் பாடியதாகக் கூறப்பட்டாலும் அவற்றில் 4,181 பதிகங்களே கிடைத்துள்ளன.

முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது அருணகிரியார், வள்ளலார் முதலானோரின் நம்பிக்கையாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE