ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ஏர்வாடி பாதுஷா நாயகம் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவின் கொடியிறக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்ஹா அமைந்துள்ளது. இங்கு பாதுஷா நாயகத்தின் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மவ்லீது ஷரீப் உடன் மே 9-ம் தேதி தொடங்கியது. அதனையடுத்து மே 19-ம் தேதி கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1-ம் தேதி அதிகாலை நடைபெற்றது. அப்போது அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமாக தர்ஹாவிற்கு எடுத்துவரப்பட்டது. சந்தனக்கூடு தர்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அதன்பின் மக்பராவில் சநதனம் பூசப்பட்டு, பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூன் 7) மாலை தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் கொடியிறக்க நிகழ்வுடன் சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE