‘‘தடையா தடையா... விநாயகருக்கே தடையா?’’

By கா.சு.வேலாயுதன்

கரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது தமிழக அரசு. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு கூடாது; விநாயகர் சிலை ஊர்வலம் கூடாது என உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு, ‘இரண்டரை அடிக்கு அதிகமான விநாயகர் சிலைகள் வைக்கக் கூடாது; வீட்டில் வைத்து சிறிய விநாயகர்கள் மட்டும் வைத்து வழிபட்டு, அவற்றைத் தனித்தனியாக அவரவரே எடுத்து வந்து நீர்நிலைகளில் கரைக்கலாம்’ என்றும் வலியுறுத்தியிருந்தது.

அதையெல்லாம் தாண்டி கோவையின் குறிச்சிகுளம், சுண்டக்காமுத்தூர் குளம், சிங்காநல்லூர்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் 15 அடி உயரம் வரையிலான சிலைகள் விநாயகர் சதுர்த்தியான நேற்று (செப்டம்பர் 10) கரைக்கப்பட்டன. இந்நிகழ்வையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் முத்தண்ணன் குளத்தில் மட்டும் மாலை 3 மணி தொடங்கி 5 மணிக்குள் 170 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. வழக்கமான ‘ஓம்காளி’, ‘ஜெய்காளி’, ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற கோஷங்களுடன், ‘தடையா, தடையா விநாயகருக்கே தடையா?’ எனும் கோஷத்தையும் விநாயகர் சிலைகளைச் சுமந்துவந்த இந்து முன்னணித் தொண்டர்கள் எழுப்பினர்.

இந்த முறை ஊர்வலங்களோ, கூட்டங்களோ அனுமதிக்கப்படவில்லை. சிலைகளைக் கரைக்க தொண்டர்களை குளங்களுக்குள் இறங்க அனுமதிக்காத போலீஸார் தாங்கள் நியமித்த ஆட்களை வைத்தே சிலைகளைக் குளங்களில் கரைத்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடந்தது. பெரிய விநாயகர் சிலைகளை அரசு உத்தரவை மீறியே வைத்திருந்தனர் இந்து முன்னணித் தொண்டர்கள்.

இதற்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றார் இந்து முன்னணி கோவை மாவட்ட நிர்வாகி சதீஸ்.

போலீஸாரிடம் பேசியபோது, ‘இந்த முறை பெரிய சிலை, சிறிய சிலை என்ற பாகுபாடில்லாமல் கணக்கெடுத்து, சிலை வைத்தவர்கள் விவரம் உட்பட அனைத்தையும் சேகரித்து வைக்கச் சொல்லி மேலிடத்து உத்தரவு. அதைச் செய்து வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

கீழே முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்ட சிலைகள் காட்சிகள், புகைப்பட ஆல்பமாக:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE