முக்கடல் சங்கமத்திலும் ஆரத்தி வழிபாடு நடத்த வேண்டும்

By என்.சுவாமிநாதன்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசி என அழைக்கப்படும் வாராணசியில் பாயும் கங்கை ஆற்றுக்கு தினம்தோறும் மாலை வேளையில் ஆரத்தி வழிபாடு நடைபெறுகிறது. கங்கையின் புனிதத்திற்கு சற்றும் குறைவில்லாதது குமரியின் முக்கடல் சங்கமம். இங்கும் அப்படியான ஆரத்தி வழிபாடு நடத்த வேண்டும் என ராஜகோகிலா அறக்கட்டளை கோரிக்கைவிடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ராஜகோபால் காமதேனு இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.

“முக்கடல் சங்கமம் சாதாரண இடமா? இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் என மூன்றுபெருங்கடல்களும் ஒன்றுசேரும் இடமல்லவா? மூன்று பக்கம் கடலாலும், ஒருபக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தேசம் இந்தியா. குமரிமுனையோ மூன்று கடல்களை சங்கமிக்கச் செய்யும் புன்னியஸ்தலம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்னும் பூகோளப் பரப்பை எடுத்துக்கொண்டால் இது இந்தியாவின் தொடக்கப்புள்ளி. அல்லது நிறைவுப் புள்ளி. இந்த நிலத்திற்கு, இந்த கடலுக்கு தனிப்பெரும் சக்தி உண்டு. சிகாகோ நாயகன், அலையும் துறவி, வீரத்துறவி, பாரதத்தின் விடிவெள்ளி என்றெல்லாம் போற்றப்படும் சுவாமி விவேகானந்தர் இந்த சமுத்திரத்திற்கு வந்து நீச்சல் அடித்து கடல் மத்தியில் இருக்கும் பாறையில் நின்று பகவதி அம்மனை நோக்கி வழிபட்டதே அதற்கு சாட்சி. அதனால் தான் இங்கே விவேகானந்தர் பாறையை கட்டி எழுப்பி நிர்வகிக்கிறது சேவையே நோக்காகக் கொண்ட விவேகானந்தா கேந்திரம்.

அந்தவகையில், அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டில் சகோதரர்களே, சகோதரிகளே என அறைகூவல் விடுத்து தர்மசிந்தனையை நிலைநாட்டிய சுவாமி விவேகானந்தரின் மனதில் ஒளிவெள்ளம் பாய்ச்சிய சமுத்திரப் பரப்பு இது. ஆன்மிகரீதியாக முக்கடல் சங்கமம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அது வெறுமனே மூன்று கடல்களின் கூடுகை மட்டுமல்ல. மக்களின் மனங்களின் கூடுகைக்கான பரந்தவெளி. ஆடி, தை, புரட்டாசி மாகாளய அமாவாசை ஆகிய விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே புனித நீராடுகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கின்றனர்.

சூரிய உதயம் புதுநாளுக்கான துவக்கம். அது ஒரு நம்பிக்கை வெளிச்சம். புதிய செயல்களுக்கு, திட்டமிடலுக்கு, அடுத்த பாய்ச்சலுக்கு நம்மைத் தயார்படுத்தும் முன்னேற்பாடு. அந்தவகையில் சர்வதேச சுற்றுலாதளமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பல்லாயிரக்கணக்கானோர் சூரிய உதயத்தை ரசித்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, தொடர்ந்து பகவதி அம்மனை வழிபடச் செல்கின்றனர். கடல்நீரை புனித நீராக பாட்டில்களில் ஏந்தி வந்து வீடுகளில் தெளிக்கின்ற வழக்கம் மக்களிடையே இருக்கிறது. ஒற்றைக் கடல்நீருக்கே அந்த புனித தன்மை உள்ளது என்றால், மூன்று பெரும் சமுத்திரங்கள் சங்கமிக்கும் முக்கடல் சங்கமத்தின் புனிதத்தன்மையை சொல்லித் தெரியவேண்டுமா?

அதனால் தான் ஆலயங்களின் வருஷாபிசேகம், கும்பாபிஷேகம், திருவிழா, கொடைவிழாக்கள், புதுமனைபுகும் விழா ஆகியவற்றுக்கும் இந்த முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித நீர் கொண்டு செல்கின்றனர். இப்படியெல்லாம் ஆன்மிகரீதியாக பக்தர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து அருள்பாளிக்கிற இந்த முக்கடல் சங்கமத்துக்கு நாம் திருப்பி செலுத்துவதுதான் என்ன?

உத்திரப் பிரதேசத்தின் கங்கைக்கு தினம், தினம் ஆராட்டு நடக்கிறது. கங்கைக்கு இணையான புனித நீரோட்டம்தான் முக்கடல் சங்கமம். கங்கையில் தினம் தோறும் மாலையில் ஏழு, இளவயதினர் பட்டாடை உடுத்தி 30 நிமிடங்களுக்கு கங்கைத்தாயை ஆராட்டுகின்றனர். கங்கையை நோக்கிப் பாடுகின்றனர். ஊதுவத்திக் கொளுத்தி ஆரம்பிக்கும் இந்நிகழ்வில், சங்கு ஊதி, சாம்பிராணி ஆரத்தி, கற்பூர ஆரத்தி எடுக்கின்றனர். மயிலிறகை ஆட்டி கங்கைத் தாயைப் போற்றுகின்றனர். காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு தரிசனத்துக்கு வருபவர்கள் கங்கை ஆரத்தியைப் பார்க்க கங்கைக் கரையில் திரள்கின்றனர். இப்படியான ஒரு ஆரத்தியை முக்கடல் சங்கமத்திலும் செய்ய வேண்டும். இதன் ஆன்மிகத்தன்மையை உலகம் முழுவதும் பறைசாற்ற வேண்டும்.’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE