கடலில் தங்க மீன் விடும் உற்சவம்

By கரு.முத்து

63 நாயன்மார்களில் ஒருவரான அதிபக்த நாயனார், சிவபெருமானுக்கு தங்கமீன் படைக்கும் உற்சவம் இன்று நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் எளிய முறையில் நடைபெற்றது.

தங்க மீன் கடலில் விடும் உற்சவம்

நாயன்மார்களில் அதிபக்த நாயனார் நாகை மாவட்டம் நம்பியார்நகரில் மீனவ குலத்தில் பிறந்தவர். சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்ட இவர் தினந்தோறும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது கிடைக்கும் முதல் மீனை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து கடலில் விடும் வழக்கத்தை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் இவரது வலையில் தங்க மீன் ஒன்றை முதல் மீனாகக் கிடைக்கும்படி செய்தார். தங்க மீனைப் பார்த்ததும் மற்ற மீனவர்கள் இதை கடலில் விட வேண்டாம். வீட்டுக்கு எடுத்துச் சென்றால் பெரும் செல்வந்தர் ஆகிவிடலாம் என்று ஆசைவார்த்தை கூறினர்.

ஆனால் அதிபக்த நாயனார், அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார். அவரது தெய்வ பக்தியை மெச்சிக்கும் இந்த விழா ஆண்டு தோறும் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கடலில் தங்க மீன் விடும் நிகழ்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அதனால் தங்க மீன் படைக்கும் விழா நம்பியார் நகர் கடற்கரையில் எளிய முறையில் நடைபெற்றது. நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடுக் கடலுக்குச் சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டுச் பிடித்தனர்.

மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபக்த நாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையில் இடும் நிகழ்வை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இதில் குறைவான அளவு பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE