‘ஸ்ரீ அன்னை’, ‘மதர்’, ‘நேத்ரா தேவி’ என்று போற்றப்படும் மிரா அல்பாசா, உயிரற்ற கல், மண் முதலானவற்றிலும் அன்பு உள்ளது என்பதை அனைவரையும் உணரச் செய்தவர். பிரார்த்தனையின் நம்பிக்கையையும் வலிமையையும் அனைவருக்கும் எடுத்துக் கூறி, இறைவனின் பாதங்களை அடைய அதுவே வழி என்பதைப் புரியவைத்தவர்.
துருக்கியைச் சேர்ந்த யூதர் மோயிஸ் மாரிஸ் அல்பாசா, எகிப்து யூதர் மதில்டே இஸ்மாலுன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக, 1878 பிப்ரவரி 21-ம் தேதி பாரிஸ் நகரத்தில் பிறந்தார், பிளான்சே ரச்சேல் மிரா அல்பாசா. இவரது அண்ணன் மேட்டொ மேத்தியூ மாரிஸ் அல்பாசார் ஆவார்.
மிரா அல்பாசா பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர், இவரது பெற்றோர் பிரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் இல்லத்துக்கு அருகேயே இவரது பாட்டி மிரா இஸ்மாலும் இருந்தார். எகிப்து நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்த முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் மிரா இஸ்மாலும், தனது பேத்தி மிரா அல்பாசாவை மிகவும் அன்புடன் வளர்த்துவந்தார்.
மிரா அல்பாசா, தனது 7-வது வயதிலிருந்து கல்வி கற்கத் தொடங்கினார். 9-வது வயதில் முறைப்படி பள்ளியில் சேர்க்கப்பட்டார். கல்வியைத் தவிர கலை, டென்னிஸ் விளையாட்டு, பாடுவது என்று பலவற்றிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் மிரா. ஆனால், மகள் எதிலும் முழுமையான கவனம் செலுத்தாமல் இருக்கிறாரே என்று கவலை கொண்டார் தாய் மதில்டே இஸ்மாலுன்.
இருப்பினும் அதை மகளிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தாயின் கவலையை உணர்ந்த மிரா அல்பாசா, தனது தந்தை சேகரித்துவைத்திருந்த நூல்களை வாசிக்கத் தொடங்கினார். பல மொழிகள், பல பாடப் பிரிவுகள், அரசியல், ஆன்மிகம், உலக நடப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படித்தவண்ணம் இருந்தார்.
நிறைய நூல்களைப் படித்ததால், தனது 14-வது வயதில், பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றார் மிரா அல்பாசா. 1893-ல் பாரிஸில் உள்ள ஜூலியன் அகாடமி கலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஹென்றி மோரிசெத் என்பவரை, மிரா அல்பாசாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் பாட்டி மிரா இஸ்மாலும்.
ஹென்றியும் மிரா அல்பாசாவும் 1897 அக்டோபர் 13-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அன்று முதல் இருவரும் பல இடங்களுக்குக் கலைப் பயணம் மேற்கொண்டனர். உணர்வுப் பதிவுவாதம் (Impressionism) இயக்கத்தில் இருவரும் கலைஞர்களாகப் பணிபுரியத் தொடங்கினர். 1898 ஆகஸ்ட் 23-ல், ஆண்ரூ என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மிரா அல்பாசா.
குழந்தையைக் கவனித்துக்கொண்டே ஓவியங்களில் அதிக கவனம் செலுத்தினார். 1903, 1904, 1905 ஆண்டுகளில் மிரா அல்பாசாவின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இடையிடையே பகவத் கீதையின் பிரெஞ்சு மொழிப் பதிப்பை வாசித்துக்கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகா’ நூலையும் வாசித்தார்.
1906-ல், அறிய இயலா இயக்கம் குறித்து அறிந்துகொள்ள அல்ஜீரியா நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார் மிரா அல்பாசா. அங்கு மேக்ஸ் தியான் மற்றும் அவரது மனைவி அல்மா தியானிடமிருந்து இயக்கத்தின் கொள்கைகளை அறிந்துகொண்டார். இருவரின் உபதேசங்களால் கவரப்பட்டார். 1908-ல் பாரிஸ் திரும்பிய மிரா அல்பாசா, அறிய இயலா இயக்கத்தினர் மற்றும் புத்த மதத்தினருடன் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டார்.
1911-ல் பால் ரிச்சர்ட் என்பவரை மிரா சந்தித்தார். ராணுவ அதிகாரியான அவருடன் தத்துவம், இறையியல் குறித்த தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது புதுச்சேரியில் பிரெஞ்ச் செனட் பதவிக்குப் போட்டியிட்டார் பால் ரிச்சர்ட். வெற்றி பெற இயலாத சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு 1914-ல், பால் ரிச்சர்ட், மிரா அல்பாசாவுடன் மீண்டும் புதுச்சேரி வந்தடைந்தார்.
அப்போது ‘ஆர்யா’ என்ற பத்திரிகையில் பணிபுரிவதற்காக, ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார் மிரா அல்பாசா. மிராவின் தத்துவங்கள், படைப்புகள் ஆகியவற்றைப் பற்றி உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர், மிரா அல்பாசாவை ‘அம்மா’ என்று விளித்து, தேவையான உதவிகளைச் செய்தார். மிரா அல்பாசாவின் பத்திரிகைத் தொகுப்புப் பணிக்கு ஸ்ரீ அரவிந்தர் பெரிதும் துணைபுரிந்தார். ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்த மிரா அல்பாசாவுக்கு, மனதில் அமைதி பிறந்தது. பல நாட்களாகக் கனவில் வந்த மகான் அவர்தான் என்பதை உணர்ந்தார்.
முதலாம் உலகப் போர் சமயம் என்பதால், ரிச்சர்ட், புதுச்சேரியைவிட்டு வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டது. வர்த்தக விரிவாக்கத்துக்காக, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். மிரா அல்பாசாவும், புதுச்சேரியைவிட்டு ஜப்பானுக்குச் சென்றார். அங்கு சில ஆண்டுகள் தங்கியிருந்து சமயப் பணிகளில் ஈடுபட்டார். 1920-ல் ரிச்சர்ட், மிரா அல்பாசா இருவரும் புதுச்சேரிக்குத் திரும்பினர். அப்போது ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, மிரா அல்பாசா மற்றும் அங்குள்ள ஏழை - எளிய மக்கள் அனைவரும், ஸ்ரீ அரவிந்தரின் இல்லத்திலேயே தங்கினர். ஸ்ரீ அரவிந்தரின் யோகா வகுப்புகளுக்காக, நிறைய அன்பர்கள் வரத் தொடங்கினர். ஸ்ரீ அரவிந்தரின் இல்லம், பெரும்பாலும் ஓர் ஆசிரமம் போலவே செயல்பட்டது.
1926 நவம்பர் 26-ம் தேதி, வெற்றி தினம் (சித்தி தினம்) என்று அறிவிக்கப்பட்டு, அன்று முதல் ஒருங்கிணைந்த யோகா பயிற்சிகள் தொடங்கின. 1930 முதல் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமப் பொறுப்புகளை ஏற்றார் மிரா அல்பாசா. அனைவருக்கும் தாயின் அன்பை அளித்ததால், அனைவராலும் ’ஸ்ரீ அன்னை’ என்று அழைக்கப்பட்டார். 1937-க்குப் பிறகு, ஆசிரமத்துக்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ஆசிரம விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. 2-ம் உலகப் போர் (1939) காரணமாக, 10 ஆண்டுகள் கழித்து, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ‘கோல்கொண்டே’ என்ற பெயர் சூட்டப்பட்டது. 1939-ல் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் மகள், மார்கரெட் உட்ரோ வில்சன், இந்த ஆசிரமத்துக்கு வருகை புரிந்து, இங்கேயே தங்க முடிவு செய்தார்.
1943-ல் 20 குழந்தைகளுக்காகப் பள்ளி ஒன்றை நிறுவினார் ஸ்ரீ அன்னை மிரா அல்பாசா. ஒருங்கிணைந்த யோகா வகுப்புகளை நடத்தினார். வழிபாட்டு முறைகளை அனைவரும் அறியும் வண்ணம் செய்தார். அனைவரிடமும் அன்பு செலுத்தப் பணித்தார். “கல், மண், மலர்கள் ஆகிய அனைத்திலும் அன்பு உள்ளது. அதனால் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்” என்று போதித்தார்.
“பிரார்த்தனை நம்மை இறைவனின் பாதையில் பாதிவழிக்குக் கொண்டு செல்லும். உபவாசம் இறைவனின் அரண்மனை வாயில்வரை செல்ல அனுமதி கொடுக்கும் என்பதை மனிதர்கள் அறிந்தனர். வலிமையான பிரார்த்தனை இல்லாவிட்டால் தெய்வீக சக்தியின் கருணையை நாம் பெற முடியாது” என உபதேசித்தார்.
1950 டிசம்பர் 5-ல், தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார் ஸ்ரீ அரவிந்தர். அதன்பிறகு, ஒன்றிணைந்த யோகா வகுப்புகளை அன்னை மிரா அல்பாசாவே நடத்திவந்தார். பலருக்கு பிரெஞ்சு மொழியைப் பயிற்றுவித்தார். சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
தனது 85-வது பிறந்த நாளில் (1963), தனக்காகக் கட்டப்பட்ட மேடையில் இருந்து, அன்னை மிரா அல்பாசா, அன்பர்களுக்கு ஆசி வழங்கினார். 1964-ல், மனித ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக, புதுச்சேரியில் ஆரோவில் (City of Dawn) என்ற புதிய நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. சென்னை – புதுச்சேரி ஈசிஆர் சாலையில் பொம்மையார்பாளையம் மற்றும் முதலியார் சாவடியில் இருந்து, 6 கி.மீ தொலைவில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் கட்டிடப் பணிகள் 1968-ல் நிறைவடைந்தன.
மனித ஒற்றுமையை வளர்க்க வேண்டும், போரே இல்லாத பொதுமை காண வேண்டும், ஆன்மிக நெறியில் அறிவியல் வளர்க்க வேண்டும், உலகுக்கு உழைப்பதையே பரிபூரண யோகமாகக் கொள்ள வேண்டும் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கி ஆரோவில் நகரம் உருவாக்கப்பட்டது. இங்கு அன்னை கோயில், ஆரோவில் தோட்டம், மாணவர் விடுதி, பயணியர் விடுதி, ஒருங்கிணைந்த யோகா பயிற்சி மையம், கண்காட்சி, படக்காட்சி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.
அரவிந்தர் ஆசிரமத்துக்கு அன்னையின் போதனைகளைக் கேட்க, அன்பர்கள் பலர் குவிந்த வண்ணம் இருந்தனர். தலாய் லாமா போன்ற ஆன்மிகவாதிகளும், வி.வி.கிரி, இந்திரா காந்தி போன்ற தலைவர்களும் அன்னையை அடிக்கடி சந்தித்தனர்.
1973 மார்ச் மாத நிறைவில், அன்னைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 15-ல் அனைத்து அன்பர்களுக்கும் ஆசி வழங்கினார். நவம்பர் 17 இரவு 7.25 மணிக்கு முக்தி அடைந்தார் அன்னை மிரா அல்பாசா.
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில், அவரது சமாதிக்கு அருகேயே ஸ்ரீ அன்னை மிரா அல்பாசாவுக்கும் சமாதி அமைக்கப்பட்டது. தற்போது, ஆரோவில் நகரத்தை மத்திய அரசின் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஸ்ரீ அன்னை மிரா அல்பாசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை, விரேகம் என்பவர் எழுதியுள்ளார். அன்னையுடனான தனது உரையாடல்களை 13 தொகுதிகளாகத் தொகுத்து, ‘தி அஜெண்டா’ என்ற நூலை சத்பிரேம் என்ற சீடர் வெளியிட்டுள்ளார்.