மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் செம்பனார்கோயில்தான் புராணத்திலும், தேவாரத்திலும், வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கும் திருச்செம்பொன்பள்ளி என்ற சிவத்தலமாகும். இலக்குமிபுரி என்றும் புராணத்தில் அழைக்கப்படும் மிகப் பழமையான தலம் இது.
‘மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே’
- என்று திருஞானசம்பந்தராலும்,
‘தந்தையும் தாயுமாகித் தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர்கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரணம் என்றங் கிமையவர் பரவியேத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச் செம்பொன் பள்ளியாரே’
- என்று அப்பராலும் பாடப்பெற்ற சிறப்புக்குரியது.
இங்குள்ள மூலவர் சுவர்ணபுரீஸ்வரர் என்றும், அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். தமிழில் ’மருவார் குழலியம்மை’ என்றும் அம்பாளைச் அழைக்கிறார்கள். தலவிருட்சமாக வன்னியும் வில்வமும் இருக்கின்றன. தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம் என்பதாகும்.
லட்சுமி, முருகன், பன்னிரு ஆதித்யர்கள், சிபிச்சக்கரவர்த்தி, வசிஷ்டர், அகத்தியர், பிரம்மன், இந்திரன், குபேரன், ரதி, நாகக் கன்னியர், அஷ்டதிக் பாலகர்கள், காவிரி, சுவர்ணரோமன் எனும் மன்னன் ஆகியோர் வழிபட்ட தலமாகவும் தலவரலாற்றில் காணப்படுகிறது.
இந்தக் கோயிலில், சோழர் காலத்திலிருந்து தஞ்சை சரபோஜி மன்னர் காலம் வரையிலான 6 கல்வெட்டுகள் உள்ளன. சோழர் கால கல்வெட்டுகள் 3-ம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜ சோழதேவர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
தல வரலாறு
இத்தலம் தாட்சாயிணி பாவ விமோசனம் பெற்ற திருத்தலம். இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனைக் கொல்ல வஜ்ராயுதம் பெற்ற தலம். இதனால் இதற்கு இந்திரபுரி என்றும் பெயர். கந்தபுரி என்ற சொல் வழக்கும் உள்ளது.
தனது கணவனை அழைக்காமல் தனது தந்தை தட்சண் நடத்திய யாகத்தால் கோபமடைந்த தாட்சாயிணி, அந்த யாகத்தை அழிக்க வேண்டி தனது கணவனை வேண்டியதும், அவர் வீரபத்திரரையும் பத்ரகாளியையும் அனுப்பி யாகத்தை அழித்ததும் அனைவருக்கும் தெரிந்தது தான். இதன்மூலம் `சிவநிந்தை புரிந்த தட்சணின் மகள்’ என்ற பாவம் தன்மேல் இருப்பதை நீக்கிட, தாட்சாயிணி இந்தத் தலத்தில்தான் பஞ்சாக்னியின் நடுவில் அமர்ந்து கடுந்தவம் புரிந்தாள். அதைக்கண்டு சுவர்ணேஸ்வரப் பெருமான் மனம் கனிந்தார். “சுகந்த குந்தளாம்பிகை எனும் திருநாமம் பெற்று இத்தலத்தில் எமது துணைவியாக எழுந்தருள்வாய்” என்று அம்பிகைக்கு அருள்பாலித்தார்.
கோயில் அமைப்பு
கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. கிழக்கு நோக்கி காணப்படுகிறது. வாயிலை அடுத்து பலிபீடம், நந்தி மண்டபமும் இருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் துவார பாலகர்கள் உள்ளனர். உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகரர் உள்ளனர். மகா மண்டபத்தில் விநாயகர், முருகன், சூர்ய, சந்திர லிங்கங்கள் உள்ளன. தெற்கு சுவரில் துறவி ஒருவரோடும், மந்திரி ஒருவரோடும் நின்று வழிபடும் அரசனின் சிற்பம் உள்ளது.
மூலவர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கீழே 16, மேலே 16 என்ற எண்ணிக்கையிலான இதழ்களுடன் கூடிய தாமரை வடிவ ஆவுடையின்மீது சுயம்பு மூர்த்தியாக, மகோத்தம லிங்கமாக அருள்கிறார் சிவன். வட்ட வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலாலும், சதுர வடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி பிரம்மாவாலும் பூஜிக்கப்பட்டதாக தலவரலாறு சொல்கிறது.
கருவறையில் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் காட்சி தருகிறாள். அம்பிகை ஆலயத்துக்கு தென் மேற்கில் சப்த கன்னிகைகள் ஆலயம் உள்ளது. பிரகாசப் பிள்ளையார் இந்திர கணபதி என்று 2 விநாயகர்கள் இருக்கிறார்கள். வனதுர்கை, விஸ்வநாதர், பாலசுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, ஜேஷ்டாதேவி, பிட்சாடனர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் இங்கு உள்ளன. கோயிலின் தென்புறத்தில் இந்திரன் அகழ்ந்ததாகக் கூறப்படும் கிணறு உள்ளது.
சித்திரை மாதம் 7-ம் நாள் முதல்18-ம் நாள் முடிய, சூரிய ஒளி கருவறைக்குள் இருக்கும் சிவன்மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. தினமும் காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். மயிலாடுதுறையிலிருந்து சென்று வர போக்குவரத்து வசதியும் உண்டு.