வள்ளி முருகனை மணம் முடித்த வேளிமலை

By என்.சுவாமிநாதன்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார்கள். அதே போல் குமரி மாவட்டத்தில் தோவாளை, மருங்கூர், வேளிமலை, முருகன்குன்றம் என மலைகளில் எல்லாம் முருகப் பெருமானின் ஆட்சி தான். அதிலும் வேளிமலை மிகவும் சிறப்பு பெற்றது. காரணம், முருகப் பெருமானுக்கும், வள்ளிக்கும் இங்கு தான் திருமணம் நடந்தது.

நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ தொலைவில் வரும் குமாரகோவில் வேளிமலையில் சுமார் 8 அடி உயரத்தில் மணாளனாக முருகன் நிற்க, அவரருகில் வள்ளி மணமகளாக காட்சி தந்து அருளுகிறார். முருகனுக்கும் வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்ததால், வேள்வி நடந்த மலையே 'வேளிமலை' ஆகியது எனப்படுகிறது. மலையாளத்தில் 'வேளி' என்ற சொல் 'திருமணம்' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில், நம்பூதிரி இனத்தவர் திருமணத்தை 'வேளி' என்றே குறிப்பிடுகின்றனர். வள்ளியை முருகன் காதலித்துக் கைபிடித்ததால் இம்மலையை திருமண மலை என்ற பொருளில் 'வேளிமலை' என வழங்குகிறார்கள்.

மலையின் அடிவாரத்தில் சிறு குன்றின் மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோயில் இது. வேளிமலை அடிவாரத்திலிருந்து 38 படிகள் ஏறிச்சென்றால் கோயில் சன்னிதியை அடையலாம்.

உள் பிரகாரத்தில் வலம் வரும்போது தென் மேற்கு மூலையில் வள்ளி, தெய்வானையுடன் விநாயகர் சாஸ்தாவுடன் வேலவர் இளைய நாயனாராக இருந்து அருள்கிறார். மேற்குப் பிரகாரத்தில் காசி விசுவநாதர் காட்சி அளிக்கிறார். வட மேற்கில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் மணவிடைக் குமாரர் சன்னிதி அமைந்து உள்ளது. இவரே நவராத்திரியின் போது திருவனந்தபுரத்திற்கும், மார்கழித் திருவிழாவின் போது சுசீந்திரத்திற்கும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்பவர். வடக்குப் பிரகாரத்தின் முடிவியில் வள்ளி தெய்வானை சமேதராக ஷண்முகராக ஆறுமுக நயினார் சன்னிதி கொண்டிருக்கிறார்.

தலவிருட்சமான வேங்கை மரத்திற்கு என தனி சன்னிதி அமைந்துள்ள தலம் இதுவாகும். முருகன் வள்ளியைக் மணம் புரிய இருந்த நேரத்தில் வள்ளியின் உறவினர் தினைப்புனம் நோக்கித் திரண்டு வர, வேங்கைமரமாக முருகப் பெருமான் மாறினார். புதிதாக ஒரு மரம் நிற்கவே அதனை அவரது உறவினர்கள் வெட்டி வீழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் வெட்டப்பட்ட வேங்கை மரத்தின் எஞ்சிய பகுதிக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஆட்டுத்தலையுடன் காட்சிதரும் தட்சனுக்கு இங்கு தனியாக கோயிலின் மேற்கு வாசல் அருகில் சன்னிதி அமைந்துள்ளது.

இக்கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் வள்ளிகுகை உள்ளது. அருகிலேயே விநாயகருக்கும் ஒரு சிறுகோயில் உள்ளது. வள்ளி குகை அருகிலேயே தினைப்புனம், வள்ளிசோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை உள்ளிட்ட இடங்கள் எல்லாம் அமைந்து உள்ளன. வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளி சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிப்பதுடன் ஆன்மிகச் சிறப்பும் உள்ளவையாக இருக்கின்றன.

பங்குனி அனுஷ நட்சத்திரத்தன்று இரவு இங்கே முருகன் வள்ளிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதற்கு முன்பு நடைபெறும் குறவர் படு களம் தனிச் சிறப்புடையதாகும். இது ஒரு நாடகப் பாங்கில் நடைபெறும் திருவிழா

திருக்கல்யாண நாளில் காலையில் முருகப்பெருமான் மலைக்கு பல்லக்கில் எழுந்தருளி வள்ளிகுகை அருகே உள்ள கல்யாண மண்டபம் செல்வார். வழியெங்கும் மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுப்பர். பிற்பகலில் முருகன், வள்ளியை பல்லக்கில் அழைத்து வருவர். அதைக் காணும் குறவர்கள், முருகனையும் வள்ளியையும் தடுத்து நிறுத்தி போர் புரிவர். குறவர் படுகளம் என்ற இந்த நிகழ்ச்சி மலைப்பாதை வழிநெடுகிலும் நிகழ்த்தப்படுகிறது. இறுதியில் கோயிலின் பின்புற வாசலில் குறவர்கள் முருகப் பெருமானிடம் தோல்வியடைந்து சரணடைவர். இந்த நிகழ்ச்சியில் மலைப்பகுதியில் வாழும் குறவர் இனத்தவர்களே அதிகம் கலந்து கொள்கிறார்கள். அறுபடை வீடுகளில் இடம் பெறாவிட்டாலும் கந்தனின் பெயர் சொல்லும் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது வேளிமலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE