வேளாங்கண்ணி திருவிழா - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

By கரு.முத்து

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கியமாதா தேவாலயத்தில் எதிர்வரும் 29 ஆம் தேதியன்று ஆண்டுப்பெருவிழா தொடங்குகிறது. கிறிஸ்துவர்களின் புனிதத்தலமான வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி செப்டம்பர் எட்டாம் தேதிவரை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டுப்பெருவிழா 29-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்வித்து கொடியேற்றுகிறார். அன்றுமுதல் எட்டாம் தேதிவரை ஒவ்வொரு நாளும் பல மொழிகளில் திருப்பலிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் மாலை ஏழுமணிக்கு அன்னையின் திருத்தேர் பவனியும் நடைபெறுகிறது.

அன்னையின் பிறந்த தினமான செப் 8 -ம் தேதியன்று ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 7 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு ஆண்டுப்பெருவிழா நிறைவுபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளியூர் பக்தர்கள் யாரும் வேளாங்கண்ணிக்கு வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும், பேராலய நிர்வாகமும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE