மாடம்பாக்கம்: தாம்பரம் அருகே மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று அதிகார நந்தி வாகன வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 23 வரை நடைபெறுகிறது. கோடியேற்றம் நடைபெற்ற நாளில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. 14-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவுசந்திர பிரபை வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில்ஒன்றான அதிகார நந்தி வீதி உலாநேற்று நடந்தது அதிகார நந்திவாகனத்தில் மலர் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, காலை 7 மணிக்கு தொடங்கிவடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்து மாட வீதிகளில் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு பூத வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மே 16-ம் தேதி (இன்று) காலை தொட்டி உற்சவமும், இரவு நாக வாகனமும் நடைபெறவுள்ளன. மே 19-ம் தேதி தேரோட்டமும், 22-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் க. விஜயன், பணியாளர்கள் மற்றும் மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, பதுவஞ்சேரி கிராம மக்கள் செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பாகம்பிரியாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.