வைகாசி அமாவாசை: ராமேசுவரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் கடல் பகுதியில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்தே ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் தோஷங்கள் நீங்கப் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி - பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் நான்கு ரத வீதி, அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதி மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சிந்துஜா (35) என்ற பெண் பக்தர் தனது குடும்பத்துடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு உள்ளே உள்ள தீர்த்தங்களில் நீராடிக் கொண்டிருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் திருட்டுப் போனதாக புகார் அளித்தை தொடர்ந்து ராமேசுவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE