காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினார்.
பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளாதளம் முழங்க கோயில் பட்டாட்டாசாரியார்கள் கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றினர்.இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வைகுண்ட பெருாமாள் கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வைகாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கியதையொட்டி வைகுண்ட பெருமாள் நாள் தோறும் காலை, மாலை என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் ஜூன் 3-ம் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் 6-ம் தேதியும், உற்சவத்தின் நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் ஜூன் 9-ம் தேதியும் நடைபெறும்.