கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம்: கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து வாண வேடிக்கையும் நடைபெற்றது.

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 12-ம் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. கடந்த 17-ம் தேதி பூச்சொரிதல், 19-ம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. 19-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை பல்வேறு வாகனங்களில வீதியுலா நடைபெற்றது.

கடந்த 26-ம் தேதி முதல் நேற்று வரை மாவிளக்கு, பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். 26ம் தேதி இரவு எதிர்காப்பு கட்டுதல் நடைபெற்றது. 27-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. 27 மற்றும் 28-ம் தேதிகளில் அக்னி சட்டி, அலகு, காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

கம்பம் ஆற்றுக்கு அனுப்புதலையொட்டி இன்று (மே 29) மதியம் கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் எம்.பி ஜோதிமணி, கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), மண்டலகுக்குழு தலைவர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

கம்பத்துடனும், கம்பம் ஆற்றுக்கு செல்லும் வழியெங்கும் பக்தர்கள் வழிநெடுக சாலையோரத்தில் காத்திருந்து தேங்காய், வாழை பழத்துடன் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். மாடி வீடுகளில் கம்பம் செல்வதை தரிசித்த பக்தர்கள் மலர்களை கம்பம் மீது வீசினர். அமராவதி ஆற்றில் கம்பம் விடப்பட்டது. தொடர்ந்து அமராவதி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வாண வேடிக்கையை கண்டு ரசித்தனர். பல பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. உள்ளூர் விடுமுறை காரணமாக கரூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

நாளை (மே 30) புஷ்ப விமானம், நாளை மறுநாள் (மே 31) முதல் 4ம் தேதி வரை கருட, மயில், கிளி, வேப்ப மர, பின்ன மர வாகனங்களில் அம்மன் புறப்பாடு. ஜூன் 5 புஷ்ப அலங்காரம், 6ல் பஞ்ச பிரகாரம், 7ல் புஷ்ப பல்லக்கு, ஸ்ரீமாரியம்மன் பல்லக்கு, ஸ்ரீமாவடி ராமசாமி பல்லக்கு, 8ல் வெள்ளி ஊஞ்சல், 9ல் சம்புரோசனை அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE