ட்ரம்பால் வந்த வினை: இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி!

By KU BUREAU

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 2800 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிஃப்டியும் 900 புள்ளிகள் சரிவுடனேயே தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பால் உலகளவில் அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் தொடங்கி இந்திய பங்குச் சந்தை வரை கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன் தாக்கம் இன்று காலையில் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (ஏப்.7) காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளன. வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2836.90 புள்ளிகள் சரிந்து 72,527.79 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 912.10 சரிந்து 21,992 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஆசிய பங்குச் சந்தைகளுக்கு கருப்பு நாள் என்று கூறும் அளவுக்கு ஜப்பான், சீனா, கொரியா என ஆசிய பங்குச் சந்தைகள் பலவும் சரிவை சந்தித்துள்ளன. இந்த சரிவு நாள் முழுவதும் நீடிக்குமா இல்லை வர்த்தத்தின் போக்கில் சரிவிலிருந்து தன்னெழுச்சி கண்டு மீளுமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE