அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதன்படி சீனாவுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன வணிக துறை நேற்று அறிவித்தது.
இதுகுறித்து சீன அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சீனாவில் இருந்து அரிய வகை தனிமங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த தனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். இதனால் அமெரிக்காவின் கணினி சிப் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி பாதிக்கப்படும்.
மேலும் 27 அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்க அரசின் வரி விதிப்பை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா 34 சதவீத வரியை விதித்திருக்கிறது. அதே அளவு வரியை நாங்களும் விதித்திருக்கிறோம். இந்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்புக்கு பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் முதலீடு செய்ய மாட்டோம் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. வரி விதிப்பால் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்திருக்கிறது. இனிமேல் சீன பொருட்கள் இந்திய சந்தையை நோக்கி திரும்ப வாய்ப்பிருக்கிறது.
இந்திய பொருட்களுக்கு 26 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்காரணமாக இந்திய வைரங்கள், தங்க நகைகள், மருந்து பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அதேநேரம் இந்திய ஜவுளி ஏற்றுமதி ஊக்கம் பெறும். சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தற்போது வங்கதேச பொருட்களுக்கு 37%, வியட்நாம் பொருட்களுக்கு 46 % இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது. இதன்காரணமாக இரு நாடுகளின் ஜவுளி ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்படும். அதேநேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.