ரம்ஜான் மாதத்திலும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை கொல்லும் இஸ்ரேல்: சீமான் கண்டனம்

By KU BUREAU

சென்னை: புனித ரமலான் மாதம் என்றும் பாராமல் பாலஸ்தீனத்தில் சிறுகுழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என வயது பேதமின்றி கொல்லப்பட்ட உடல்களாகச் சிதறிக் கிடக்கும் காட்சிகள் மனதை ரணமாக்கி, இதயத்தை அறுக்கின்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் ஒவ்வொரு நாளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் செய்திகள் பெரும் கவலையையும், துயரத்தையும் அளிக்கிறது.

இசுலாமியப் பெருமக்கள் இறைவனை எண்ணி நீர்கூட அருந்தாமல் நோன்பிருக்கும் புனித ரமலான் மாதம் என்றும் பாராமல் சிறுகுழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என வயது பேதமின்றி கொல்லப்பட்ட உடல்களாகச் சிதறிக் கிடக்கும் காட்சிகள் மனதை ரணமாக்கி, இதயத்தை அறுக்கின்றது.

போரினால் உடைக்கப்பட்ட பள்ளிவாசலின் இடிபாடுகள் இடையேயிருந்து புனித ரமலான் மாத அதிகாலை தொழுகைக்காகத் துயரம் தோய்ந்த விம்மிய குரலில் கேட்கும் அழைப்பொலி, கண்களில் இரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. அம்மக்களின் குலையாத மன உறுதியையும் உலகிற்கு உணர்த்துகிறது.

இஸ்ரேல் இராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்கும்தான் போரே தவிர அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? காசா பெருநிலத்தில் வாழும் பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று புதைப்பது என்ற இஸ்ரேலின் மனித வேட்டையை உலகம் எப்படி இன்னும் வேடிக்கைப்பார்க்கிறது? அறிவியல் முதல் அனைத்திலும் வளர்ச்சியடைந்தாகக் கூறப்படும் நாடுகள் இக்கொடுமைகளை எப்படி அனுமதிக்கிறது?

அறம் சார்ந்து நிற்க வேண்டிய ஐ.நா.மன்றம் இதனை எப்படி சகித்துக்கொள்கிறது? நாகரீகமடைந்த மனித சமுதாயம் இதை எப்படி அமைதியாக கடந்துபோகிறது?

அன்று ஈழத்தாய்நிலத்தில் சிங்கள இனவாத கொடுங்கோலர்களால் எம் தொப்புள்கொடி உறவுகள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட கொடுமைகளை உலகம் எப்படி தடுக்கத்தவறி, தமிழினம் அழிய துணைநின்றதோ, அதைப்போலவே இன்று பாலஸ்தீனத்திலும், உக்ரைனிலும் நடைபெறும்போரைத் தடுக்காது மக்கள் அழிவதை வேடிக்கைப்பார்ப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.

‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?’ என்று பாடிய எங்கள் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன், ‘புதியதோர் உலகம் செய்வோம்! கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்றார்!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்னின்று உடனடியாக பாலஸ்தீனத்திலும், உக்ரைனிலும் நடக்கும் கொடும்போரை நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கெட்டப்போரிடும் உலகம் வேரோடு சாயட்டும்!
போரில்லா உலகில் புதிய உயிர்கள் பிறக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE