மியான்மரில் 7.7 ரிக்டரில் நிலநடுக்கம்; பாங்காங்கில் சரிந்த வானுயர்ந்த கட்டிடங்கள் - அதிர்ச்சி வீடியோக்கள்!

By KU BUREAU

பாங்காங்: மியான்மரில் இன்று காலை 11.50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பாங்காங்கில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. இதன் தாக்கம் மியான்மரை ஒட்டியுள்ள தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.

தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். இதையடுத்து பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்மரில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை இந்திய நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.மியான்மர் மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. இதனிடையே, பாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து விரிவான தகவல்கள் ஏதுமில்லை.

சுமார் 17 மில்லியன் மக்கள் பாங்காகில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்கள் தங்கியுள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்த எச்சரிக்கை வந்ததும் அனைவரும் படி வழியாக கீழே இறங்கி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் சூழலில் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வசதியாக பாங்காக்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE