'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு இல்லை: டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு

By KU BUREAU

டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை நேற்று வெளியிட்ப்பட்டது. அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.

கடந்த 2025-ம் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை (வருடாந்திர தேர்வு அட்டவணை) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில், மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பழைய அறிவிப்புகள். 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும்.

அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 51 வட்டார கல்வி அலுவலர்களை (பிஇஓ) நியமிப்பதற்கான தேர்வுக்கு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

டெட் அறிவிப்பு இல்லை: பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டெட் தேர்வு குறித்து அறிவிப்பு ஏதும் டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படாது. தமிழகத்தில் கடைசியாக 2023-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சி-டெட் தகுதித் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE