உதகை மலர்‌க் கண்காட்சி மே 16-ம் தேதி தொடக்கம்

By KU BUREAU

உதகையில் 127-வது மலர்க் கண்காட்சி மே 16-ம் தேதி தொடங்கி, 6 நாட்கள் நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஒவ்வோர் ஆண்டும் மே மாதம்‌ கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறிக் கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, பழக் காட்சி ஆகியவை நடைபெறும். இதைக் காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்‌ வருகை புரிகின்றனர்‌.

இந்த ஆண்டு மலர்‌க் கண்காட்சி மற்றும்‌ பழக் காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் உதகையில்‌ நேற்று நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை இயக்குநர்‌ மற்றும்‌ மலர்க் கண்காட்சி குழுத் தலைவர்‌ குமாரவேல் பாண்டியன்,‌ நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில்‌, கோத்தகிரியில் மே 3 மற்றும்‌ 4-ம் தேதிகளில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் 9 முதல்‌ 11-ம் தேதி வரை வாசனை திரவியக் கண்காட்சி, உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10 முதல்‌ 12-ம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 127-வது மலர்‌க் கண்காட்சியை உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில் மே 16 முதல்‌ 21-ம் தேதி வரையும், 65-வது பழக் காட்சியை குன்னூர்‌ சிம்ஸ்‌ பூங்காவில் மே 23 முதல் 25-ம் தேதி வரையும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30 முதல் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம், தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE