உதகை: நீலகிரி மாவட்டத்தில், 2011-ம் ஆண்டின் தரவுகளின்படி, 1,426 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வனங்கள் அதிகமாக உள்ள நீலகிரியில் ஒருபுறம் தேயிலை தோட்டங்களின் அருகேயுள்ள வனங்கள், வருவாய்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மறுபுறம் தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு, கட்டிட காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதை தவிர, குப்பை கொட்டும் இடமாக வனங்கள், நீரோடைகள், நீர்ப் பிடிப்பு பகுதிகள் மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்டவை அதிகமுள்ள குன்னூர்டைகர் ஹில், சி.எம்.எஸ்., பந்துமை உள்ளிட்ட வனப்பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. இங்கு தடுப்பணையை சுற்றியுள்ள வனப்பகுதிகளில், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள் ளிட்ட குப்பைகளை இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து கொட்டி செல்கின்றனர்.
மேலும், வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், ஓடைகள் வழியாக குன்னூர் வழியாக பவானி ஆற்றில் கலக்கும் நிலையில், ஓடைகளில் இரவு நேரங்களில் குப்பை கொட்டுவதால், அதன் பாதிப்பு சமவெளி பகுதிகள் வரை சென்று, வன உயிரினங்களுக்கும், விவசாய உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
» கழிவுநீர் கலப்பு, ஆகாயத்தாமரை பரவலால் மாசடைந்த கோவை குளங்கள்!
» மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 51 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?
உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி, மக்கும்,
மக்காத குப்பைகளை பிரித்து வழங்க உள்ளூர் மக்களின் ஆதரவுடன் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வனப் பகுதியில் கழிவுகளை கொட்டுவோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை தடுக்காவிட்டால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், தனியார் நிறுவனங்களின் குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது. அதில், கொட்டப்படும், பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மருத்துவ கழிவுகள், துருப்பிடித்த இரும்பு வகைகள், கட்டிட கழிவுகளால் வனச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், அதில் வாழும் உயிரினங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
கிளீன் குன்னூர் அமைப்பின் தலைவர் சமந்தா அயனா கூறும்போது, ”நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் முக்கிய கடமையாக உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு வனப்பகுதிகளில், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் உட்பட உணவு கழிவுகளை மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகளை நேரடியாக பெறுவதற்கான வழிமுறைகள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், வனம், வன உயிரினங்கள் மட்டுமல்லாமல், சமவெளி பகுதியில் உள்ள பவானி ஆற்றின் நீர் மாசுபடும் அபாயம் ஏற்படும்” என்றார்.