வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். படுகயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோகனி நகரில் உள்ள ஒரு இரவு விடுதியில், சனிக்கிழமை இரவு இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 1,500 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2.35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறி உள்ளனர். எனினும், பலர் தீயில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தீயில் கருகிய 51 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர்களுடைய உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்: இந்த விபத்து குறித்து பிரதமர் ரிஸ்திஜன் மிகோஸ்கி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “இன்று மாசிடோனியாவுக்கு கடினமான மற்றும் மிகவும் சோகமான நாள். தீ விபத்தில் பல இளைஞர்கள் உயிரிழந்திருப்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வலி அளவிட முடியாதது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
» மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 425 கனஅடியாக அதிகரிப்பு
» தொழிலாளர்களின் பேராதரவு பெற்றவர் திருப்பூர் துரைசாமி: கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் புகழாரம்
இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடிப்பது போன்ற பைரோடெக்னிக் சாதனங்களை பயன்படுத்தியதே தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது