சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டது டிராகன் விண்கலம்: சுனிதா வில்லியம்ஸ் சில நாளில் பூமி திரும்புகிறார்

By KU BUREAU

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 வீரர்களுடன், டிராகன் விண்கலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘தி ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புறப்பட்டு சென்றது. இதன் மூலம் விண்வெளியில் 9 மாதமாக தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விரைவில் பூமி திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணி மேற்கொள்ள நாசா வீரர்கள் ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பான் வீரர் டகுயா ஒனிஷி, ரஷ்ய வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலம் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘தி ஃபால்கன் 9 ராக்கெட்டில்’ நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். இந்த விண்கலம் கடந்த வியாழக்கிழமை புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஏவுதளத்தில் உள்ள ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இதன் பயணம் தாமதமானது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் செல்லும் 10-வது குழுவினர், சர்வதேச விண்வெளி மையம் சென்றதும், அங்கு கடந்த 9 மாதங்களாக தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்புகின்றனர். இவர்கள் கடந்தாண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 8-வது நாளில் இவர்கள் பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இவர்கள் பூமி திரும்பவில்லை.

இவர்கள் சென்ற விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமி திரும்பியது. தற்போது புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ளதால், இன்னும் சில நாட்களில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE