சிரியாவில் உள்நாட்டு போர்; 2 நாட்களில் 1,000 பேர் உயிரிழப்பு: பெண்களை மானபங்கம் செய்வதாக புகார்

By KU BUREAU

சிரியாவில் பாதுகாப்புப் படையினர், கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், பெண்களை மானபங்கம் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கொலை செய்வதாகவும் புகார் வந்துள்ளது.

சிரியா நாட்டில் நடைபெற்று வந்த அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. சிரியாவின் அதிபராக இருந்த அல் அசாத், ரஷ்யாவுக்கு தப்பிச்சென்றார். இதைத் தொடர்ந்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்று ஆட்சியை நடத்தி வந்தார்.

அதே நேரத்தில், சிரியாவின் முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுவினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிரியாவின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள லடாக்கியா, டர்டோஸ் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த 2 தினங்களாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்புப் படையினர் குழுமியுள்ள சோதனைச்சாவடிகள், ராணுவ நிலைகள், ரோந்து வாகனங்களை குறிவைத்து, அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த இந்த மோதலில் இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதால் இந்த உயிரிழப்பு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

மோதலில் உயிரிழந்த 1,018 பேரில் 745 பேர் பொதுமக்கள், 125 பேர் பாதுகாப்புப் படையினர், 148 பேர் கிளர்ச்சியாளர்கள் என தெரியவந்துள்ளது. மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் கூடுதல் படைகளை சிரியா அரசு அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

குடிநீர், மின்சாரம் நிறுத்தம்: இந்நிலையில் மோதல் நடைபெற்று வரும் பகுதியில் மின்சாரம், குடிநீர் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. லடாக்கியா பகுதியில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அங்குள்ள கிராமங்களில் புகுந்த கிளர்ச்சியாளர்கள் கடைகளை சூறையாடி தீவைத்து விட்டுத் தப்புவதாகவும் தகவல்கள் வந்துள்ளனர். மேலும், லடாக்கியா நகர தெருக்களில் பெண்களை மானபங்கம் செய்து ஊர்வலமாக அழைத்து வந்து சித்ரவதை செய்வதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவ்வாறு நடந்து வர மறுக்கும் பெண்களை சுட்டுக் கொலை செய்யும் சம்பவங்களும் அங்கு நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது.

இங்குள்ள பனியாஸ் எனப்படும் நகரங்களில் இந்தக் கொடுமை நடந்து வருவதாகவும், நகர வீதிகளில் மானபங்கம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சடலங்களை உறவினர்கள் எடுப்பதற்காக வருவதைத் தடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியுடன் அங்கு காவலுக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE