ஒருநாள் போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் ‘குட்பை’

By KU BUREAU

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் 2015, 2013-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய அங்கும் வகித்தார். 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய அணி தன்னைத் தயார்படுத்தி வருவதால் ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று ஸ்மித் கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டராக அறிமுகமாகியிருந்தார் ஸ்டீவ் ஸ்மித். தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியுடன் 5,800 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள், 35 அரை சதங்கள் அடங்கும். பந்துவீச்சில் 28 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள போதிலும் டெஸ்ட், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட ஸ்டீவ் ஸ்மித் முடிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE