மதுரை: தமிழக அரசு வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் உடற்கல்வியைச் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை கல்வி வளர்ச்சியுடன் மாணவர்களிடையே உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை உறுதியாக மேம்படுத்தும்.குழந்தைகளின் கண் நலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கெனவே ‘பி.டி.பீரியட்’ என்று உடற்கல்வி வகுப்பை அன்று சுருக்கமாக சொல்வர். இத்துடன் ‘மாரல் பீரியட்’ என்ற ஒன்றும் உண்டு. அதாவது நல்லொழுக்கக் கல்வி பாடம். கால ஓட்டத்தில் போட்டி மயமான கல்விச் சூழலில் இவை மறக்கடிக்கப்பட்டு விட்டன.
உடற்கல்வியாகட்டும் நல்லொழுக்க கல்வியாகட்டும் பெரும்பாலும் வகுப்பறைக்குள் நடைபெறாது. வகுப்புக்கு வெளியேதான். இது கிட்டப் பார்வையைத் தடுப்பதற்கு உதவும் என்று தேசிய கண் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியஒருங்கிணைப்பாளரும், ஒய்வு பெற்ற கண் மருத்துவ உதவியாளருமான மு.வீராசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அண்மைக் காலமாக கிட்டப் பார்வை பிரச்சினை குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. விழிக் கோளம் நீட்சி அடைவதால் கிட்டப் பார்வை ஏற்படுகிறது. இந்த குறைபாடு அதிகரிப்பால் 21-ம் நூற்றாண்டின் பொது சுகாதார பிரச்சினையாக பேசப்படுகிறது. கிட்டப் பார்வைக்கு உரிய நேரத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டால் பார்வை நன்றாகத் தெரியும். கண்ணாடியை தொடர்ந்து போட வேண்டும். இல்லையென்றால் பார்வைக்குறைவு அதிகரித்து உயர் கிட்டப்பார்வை ( High Myopia ) நிலைக்குச் சென்றுவிடும். அதாவது -2, -3 என்றிருக்கும் கண்ணாடி பவர் -6, -8 என்று அதிகரித்து விடும்.
இந்த நிலைக்கு சென்றுவிட்டால் பின்னாளில் கண் நீர் அழுத்த உயர்வு, விழித்திரை பிரிதல், கண்ணின் மேகுலா பாதிப்படைதல் என்று பார்வையை பாதிக்கும் கடும் பக்க விளைவுகளுக்கு வழிவகுத்து விடும். எனவே, சிறு வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப் பார்வையை தாமதப்படுத்துவதன் மூலமோ, ஏற்படுவதை தடுப்பதன் மூலமோ கண்ணில் ஏற்படும் கடுமையான பார்வை பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
» திருச்சி மத்திய சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 23 கைதிகள்!
» கிருஷ்ணகிரி: கெரிகேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு ”ஐஎஸ்ஓ” தரச்சான்று!
கிட்டப்பார்வை அதிகரிப்புக்கு என்ன காரணம் ?: கிட்டப்பார்வை அதிகரிப்புக்கு சுற்றுச்சூழல் மற்றும் கல்விக்காக கொடுக்கப்படும் அழுத்தமே காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க பெற்றோரும் ஆசிரியர்களும் தொடர்ந்து அழுத்தம் தருகிறார்கள். அத்துடன் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் கணினி போன்ற மின்னணு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடும் அவர்களை அறைக்குள்ளேயே முடக்கி விடுகிறது.
கண்ணுக்கு அருகில் தொடர்ந்து வேலை செய்யும் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை விரைவாகவே ஏற்படும் வாய்ப்புள்ளது. ஸ்மார்ட்போனோ, ‘ஐ’ பேடோ அவைகளின் டிஜிட்டல் திரை ஏற்கெனவே சிறியவை. அதில் உள்ள எழுத்துருக்கள் மேலும் சிறியவை. இந்த மின்னணு சாதனங்களை தொடர்ந்து பார்க்கும்போது, கண்ணின் ஈடு செய்யும் திறன் மற்றும் 2 கண்களின் இணைந்த இயக்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கிறது.
வெளிப்புறச் சூழலால் என்ன பயன் ?: குழந்தைகள் வெளிப்புறச் சூழலில் சூரிய ஒளியில் படும்போது, விழித் திரையில் டோபமைன் ஹார்மோனை அதிகமாக சுரக்க உதவுகிறது. டோபமைன் விழிக்கோளத்தின் நீட்சியைத் தடுப்பதன் மூலம் கிட்டப்பார்வையின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. சூரிய ஒளி வைட்டமின் ‘டி’ ஐ உற்பத்தி செய்யவும் உதவுகிறது. இது கிட்டப்பார்வை எற்படாமல் கண்ணை பாதுகாக்க உதவுவதாக பல ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.
கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்த காலை வேளையில் நாள்தோறும் பள்ளி மாணவர்களை குறைந்தது 45 நிமிடங்கள் வகுப்பறைக்கு வெளியே இருக்கச் சொல்கிறார்கள். வெளிப்புற நேரம் கிட்டப்பார்வையை தாமதப்படுத்தக்கூடிய வலுவான சுற்றுச்சூழல் காரணியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. தைவான், சீனா மற்றும் சிட்னியில் நடைபெற்ற ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. வெளிச்சம் நன்றாகவும் பிரகாசமாகவும் இருக்கும்போது கிட்டப்பார்வையின் பாதிப்பு குறைகிறது.
சீனாவிலும், தைவானிலும் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் 40-60 நிமிடங்கள் கட்டாய ஓய்வு இடைவேளை நேரத்தை வழங்கி இருக்கிறார்கள். அப்போது வகுப்பறையை பூட்டிவிட்டு, அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக வெளிச் சூழலில் இருக்கச் செய்கின்றனர். இது கிட்டப்பார்வை நிகழ்வு மற்றும் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் நல்ல முடிவுகளைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு செய்ய வேண்டியது: வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரை உடற்கல்வி அமல்படுத்தப்பட இருக்கிறது. வகுப்புகள் பெரும்பாலும் திறந்த வெளியில்தான். காலை வேளையில் குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்தலாம். அப்போது மாணவர்கள் வெளிப்புறச் சூழலில்தான் இருக்கப் போகிறார்கள். குறிப்பாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதனால் பிள்ளைகளின் கண் நலனும் பாதுகாக்கப்படும். உடற்கல்வியில் குறிப்பாக கிட்டப்பார்வையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு செய்தியும் இடம்பெற வேண்டும். தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கும் பொருந்துபடியாக இந்த உடற்கல்வி செயல்படுத்தப்பட வேண்டும். வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப் படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே கிட்டப் பார்வையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட முதல் மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும்.