வரும் பிப்.28ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இதை மாணவர்கள், பொதுமக்கள் தொலைநோக்கி வாயிலாக கண்டுகளிக்க திருச்சி அஸ்ட்ரோ கிளப் ஏற்பாடு செய்துள்ளது.
சூரிய குடும்பத்தை சேர்ந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் வரும் பிப்.28 முதல் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன. இந்த அரிய நிகழ்வு மீண்டும் 2040-ம் ஆண்டில்தான் நிகழும். மேலும், இந்தியாவில் மார்ச் 3 முதல் அடுத்த 2 வாரங்களுக்கு யுரேனஸ், நெப்டியூனை தவிர பிற 5 கிரகங்களை வெறும் கண்களால் காண முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் சு.உமா ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கடந்த ஜனவரி மாதம் வான்வெளியில் நிகழ்ந்த ‘ஒரே நேர்கோட்டில் ஆறு கிரகங்கள்’ என்ற அரிய நிகழ்வை பலரும் நவீன தொலைநோக்கிகள் மூலமும், சிறப்பு செயலிகள் (Stellarium Mobile App) மூலமும் கண்டுகளித்தனர்.
தற்போது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கோள்களின் அரிய அணிவகுப்பை பிப்.28-ம் தேதி முதல் மார்ச் 4 தேதி வரை 5 நாட்களுக்கு காண முடியும். இந்த கிரகங்களின் அணிவரிசையை மிகத் துல்லியமாக நேர்க்கோடு என்று சொல்லமுடியாது. சூரியன் மறைவிற்குப் பின்னர் இரவு வானில் ஒரே பக்கமாக அணிவகுப்பு என்பதே சரியாக இருக்கும்.
» சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச உண்டு உறைவிட பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
» போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் - வாடிகன் சொல்வது என்ன?
சூரியனின் பிரகாசம் காரணமாக சனி கோளை 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் காண இயலும். குறிப்பாக மாலை 6.45 மணி முதல் 7 மணி வரை தெரியும். யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற கோள்களை வெறும் கண்களால் நன்றாக காணலாம்.
வானில் தெரிபவை எல்லாம் நட்சத்திரங்களாக இருக்கும் என்னும் எண்ணத்தை மாற்றி, இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வானவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வான்நோக்கர்களுக்கு இது உற்சாகமூட்டும் நிகழ்வாக இருக்கும். எனவே, பொதுமக்கள், மாணவர்கள் இந்நிகழ்வை காண்பதற்கு தேவையான ஏற்பாடுகளை திருச்சி அஸ்ட்ரோ கிளப் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.