பெருந்துறை வட்டார அரசு பள்ளிகளில் வடமாநில மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!

By KU BUREAU

ஈரோடு: உத்தரப்பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர், உத்ராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் குடும்பத்துடன் தங்கி பணி புரிகின்றனர்.

இவ்வாறு தங்கியுள்ளவர்கள் அருகில் உள்ள தமிழக அரசின் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும அதைச் சுற்றியுள்ள ஈங்கூர், வாய்ப்பாடி, சிறுகளஞ்சி, பணியம்பள்ளி, பணிக்கம்பாளையம், காடப்பாளையம், கம்பளியம்பட்டி, சரளை போன்ற பகுதிகளிலும் துடுப்பதி, விஜயமங்கலம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, திங்களூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வட மாநில மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

உதாரணமாக, பெருந்துறை சிப்காட்டை ஒட்டியுள்ள ஈங்கூர் அரசு தொடக்கப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டில் 110 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 25 மாணவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். நடப்பு 2024-25ம் கல்வியாண்டில் 113 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் புதியதாக 32 வட மாநில மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு, மதியம் சத்துணவு, இலவ்ச சீருடை, பாடப்புத்தகங்கங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், வடமாநில தொழிலாளர்கள் நமது பள்ளிகளில் அவர்களது குழந்தைகளைச் சேர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியே தெரியாமல் பள்ளியில் சேர்க்கப்படும் இந்த குழந்தைகள், முதல் ஒரு மாதத்துக்கு மொழி தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

ஆனால், படிப்படியாக கல்வி கற்றுக் கொண்டு நன்றாக படிக்கத் தொடங்கி விடுகின்றனர். பொதுவாக, வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வேலைக்குச் சென்று விடும் நிலையில், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் சேர்ப்பதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது, என்றனர். மத்திய அரசின் கல்விக் கொள்கை விவாதமாகியுள்ள நிலையில், வடமாநில குழந்தைகள் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் படிப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE