இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேலின் பெயரை பரிந்துரை செய்தார். இந்த நியமனத்தை அமெரிக்க செனட் அவை உறுதி செய்ய வேண்டும்.
செனட் அவையில் மொத்தமுள்ள 100 எம்பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்பிக்களும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 எம்பிக்களும் உள்ளனர்.
அவையில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலுக்கு ஆதரவாக 51 எம்பிக்களும், எதிராக 49 எம்பிக்களும் வாக்களித்தனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த 47 எம்பிக்களுடன் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த லிசா முர்கோவ்ஸ்கி, மைனேயின் சுசன் கால்லின்ஸ் ஆகியோரும் எதிராக வாக்களித்தனர். இறுதியில் பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவால் காஷ் படேலின் நியமனம் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
» கோடநாடு வழக்கில் செல்போன் தகவல் பரிமாற்ற விவரங்களை பெற இன்டர்போல் போலீஸாருக்கு சிபிசிஐடி கடிதம்
» புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்த விழுப்புரம் நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரல் போன்டிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்காவை பாதுகாப்பதில் எஃப்பிஐ அமைப்புக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதலின்போது நாட்டை பாதுகாத்ததில் எஃப்பிஐ அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
அண்மைக்காலமாக நமது நீதி அமைப்பு அரசியல்மயமாக்கப்பட்டது. இதனால் மக்களின் நம்பிக்கையை இழந்தோம். அந்த அவநம்பிக்கை இன்றுடன் முடிவடைகிறது. எஃப்பிஐ அமைப்பின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே எனது இலக்கு. எனது பதவிக் காலத்தில் வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய, நீதிக்கு உறுதியளிக்கும் புலனாய்வு அமைப்பாக எஃப்பிஐ செயல்படும்.
அமெரிக்கர்களுக்கு தீங்கிழைக்க முயற்சி செய்வோருக்கு இந்த நேரத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கிறேன். பூமியில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களை வேட்டையாடுவோம். கடமைக்கு முதலிடம், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் பணியை தொடங்குவோம். இவ்வாறு காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
90 நாடுகளில் கிளைகள்: அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்புக்கு அந்த நாடு முழுவதும் 56 பிரதான அலுவலகங்களும் 350 கிளை அலுவலகங்களும் உள்ளன. 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் எஃப்பிஐ அலுவலகங்கள் செயல்படுகின்றன. சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோபோல், பிரிட்டனின் எம்16, இஸ்ரேலின் மொசாட், இந்தியாவின் ரா உளவு அமைப்புகளுடன் இணைந்து எஃப்பிஐ செயல்படுகிறது. இதன் இயக்குநரின் பதவிக் காலம் 10 ஆண்டுகள் ஆகும். முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
குஜராத் பூர்விகம்: காஷ் படேலின் பெற்றோர் குஜராத்தை பூர்விகமாக கொண்டவர்கள். ஆப்பிரிக்காவின் உகாண்டாவில் வசித்த அவர்கள், அந்த நாட்டு சர்வாதிகாரி இடி அமினின் கொடுங்கோல் ஆட்சியால் கடந்த 1970-களில் அங்கிருந்து தப்பி கனடா வழியாக அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டில் சட்ட படிப்பை நிறைவு செய்த காஷ் படேல் அரசு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்க நீதித் துறையில் படேல் இணைந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க உளவு விவகார கமிட்டியின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில் அவருக்கு மிகவும் நெருங்கிய வட்டத்தில் காஷ் படேல் இணைந்தார். அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அரசு பணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்காக அவர் கடினமாக உழைத்தார். அதன் பலனாக தற்போது எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.