புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் - 2025 கண்காட்சி: ஐஐடியில் பிப்ரவரி 28-ல் தொடங்குகிறது

By KU BUREAU

சென்னை: மாணவர்களின் 183 நவீன புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான இன்வென்டிவ்- 2025 எனும் தலைப்பிலான மாபெரும் கண்காட்சி சென்னை ஐஐடியில் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி சார்பில் இன்வென்டிவ் - 2025 எனும் தலைப்பில் மாபெரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை கொண்ட கண்காட்சி அதன் வளாகத்தில் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

டெல்லி, ஐதராபாத்தை தொடர்ந்து சென்னை ஐஐடியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள 19 ஐஐடிக்கள், 31 என்ஐடிக்கள், தனியார் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த மாணவர்களின் 183 கண்டுபிடிப்புகள் அடங்கிய அரங்குகள் ஏற்படுத்தப்பட உள்ளன. விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, கடல்சார், விண்வெளி, மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட 8 பிரிவுகளில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம்பெற உள்ளன. அதில் 8 கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவைகளாகும்.

இதுதவிர தொழிலும், கல்வியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் நிறுவனங்களுடனான உறவை வலுப்படுத்தவும், புத்தொழிலில் முதலீட்டாளர்களின் கவனத்தை கொண்டு வரவும் இத்தகைய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் பங்கு பெற உள்ளனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வும் நடக்க இருக்கிறது. இதுபோன்ற கண்காட்சி ஒன்றில்தான் சென்னை ஐஐடி கண்டறிந்த 5ஜி தொழில்நுட்பம் அடையாளம் காணப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE