அமெரிக்கா - ரஷ்யா பேச்சும், ஐரோப்பிய நாடுகளின் அதிருப்தியும்: உக்ரைன் போர் முடிவுக்கு வருவது சாத்தியமா?

By KU BUREAU

மாஸ்கோ: சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், 2022 முதல் நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், இந்தப் பேச்சுவார்த்தையால் ட்ரம்ப் மீது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே, புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனித்தனியாக தொலைப்பேசியில் உரையாடல் நடத்தினார்

இதனையடுத்து, சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரினை நிறுத்துவது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோவை சந்தித்தார். உக்ரைன் மற்றும் ஐரோப்பா இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய தரப்பில் கூறும்போது, "உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சவுதி அரேபியாவில், அமெரிக்காவும், ரஷ்யாவும் நேர்மறையான, ஆக்கபூர்வமான நான்கு மணி நேர சந்திப்பை நடத்தின" என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவுடனான உறவினை இயல்பாக்க உதவும் என நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார்" என்றார்.

ஆனாலும், “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஒரு இறையான்மை கொண்ட நாடாக, நாங்கள் பங்கு பெறாத பேச்சுவார்தையில் எட்டப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். மேலும், ரியாத் செல்லும் பயணத்தை உக்ரைன் அதிபர்ஜெலன்ஸ்கி ஒத்தி வைத்துள்ளார்.

அதேபோல நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதை அனுமதிக்க முடியாது என சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா மீண்டும் உறுதியாக கூறியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் நேட்டோ நாடுகளின் பகையை ட்ரம்ப் சம்பாதித்துள்ளார். இதனால் மொத்த ஐரோப்பிய கண்டமும் அதிர்ந்துள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் ட்ரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் ட்ரம்ப் ஆலோசனை செய்யவில்லை. எனவே வரும் நாட்களில் டிரம்பிற்கு எதிராக ஐரோப்பா நாடுகள் கடுமையான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE