தென்னைமரங்கள் பல்வேறு நோய்களால் அழிகின்றன: விவசாயிகளை காப்பாற்ற ஓபிஎஸ் வேண்டுகோள்!

By KU BUREAU

சென்னை: ரூ கோஸ், சுருள் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தென்னை மரங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களுக்கு பல வகைகளில் பயன்படக்கூடிய மரங்களில் ஒன்றாக விளங்குவது தென்னை மரம் என்று சொன்னால் அது மிகையாகாது. "அண்ணன் - தம்பியை நம்புவதைவிட தென்னையை நம்பு" என்ற பழமொழி தென்னை மரத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக்குகிறது. இப்படிப்பட்ட தென்னை மரங்கள் தமிழ்நாட்டில், குறிப்பாக பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு, ஆனைமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளருகின்றன.

கடந்த சில மாதங்களாக, ரூ கோஸ், சுருள் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, கண்ணாடி இறக்கை பூச்சி, சிலந்தி பூச்சி ஆகியவற்றின் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் உள்ளாகி, கேரள வேர் வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், மஞ்சள் வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தென்னை மரங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. இது தவிர, வறட்சி காரணமாக அழிந்து வரும் தென்னை மரங்களும் ஏராளம்.

பொதுவாக, தேங்காய்க்கு விலை இருக்கும்போது விளைச்சல் இருக்காது, விளைச்சல் இருக்கும்போது விலை இருக்காது என்ற நிலை இருப்பதன் காரணமாக தென்னை மர விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தற்போது, பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதன் காரணமாக, காய்ப்புத் திறன் வெகுவாக குறைந்துவிட்டது என்றும், பூச்சித் தாக்குதல் காரணமாக தென்னை மரங்களை வெட்ட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் தேங்காய் மட்டையில் இருந்து நாரை பிரிக்கும்போது கிடைக்கும் தேங்காய் மஞ்சை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வந்துவிடும் என்றும், இதன்மூலம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும் தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேளாண் வல்லுநர்கள், தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினைத் தரக்கூடிய, அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்தி, தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE