ஐபிஎல் போட்டிகளை இனி இலவசமாக பார்க்க முடியாது: ரிலையன்ஸ்-டிஸ்னியின் புதிய திட்டங்கள் அறிமுகம்!

By KU BUREAU

சென்னை: ரிலையன்ஸ்-டிஸ்னி நிறுவனங்கள் (joint venture) இணைந்துள்ள காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது. ரிலையன்ஸ்- டிஸ்னியின் புதிய செயலியில் சந்தா செலுத்தியே ஐபிஎல் போட்டிகளை காணலாம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகியவை கடந்த ஆண்டு தங்கள் இந்திய ஊடக சொத்துக்களை 8.5 பில்லியன் டாலர் மதிப்பில் இணைத்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு 3 பில்லியன் டாலருக்கு ஐபிஎல் போட்டிகளுக்கான உரிமைகளை ஜியோ சினிமா பெற்றதிலிருந்து, இலவச ஐபிஎல் போட்டிகளை அந்நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது.

ரிலையன்ஸ்-டிஸ்னி இணைந்த பிறகு ஐபிஎல் உட்பட அதன் அனைத்து ஒளிபரப்புகளையும் சந்தா முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், சிறிது காலத்திற்கு மட்டுமே இலவச சேவை வழங்கப்படும் என்றும், பின்னர் பயனர்கள் விரும்பியபடி சந்தாக்களை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரிலையன்ஸ்-டிஸ்னி நிறுவனம் புதியாக ஒரு ஸ்ட்ரீமிங் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியில் 149 ரூபாய்க்கு அடிப்படைத் திட்டத்தையும், மூன்று மாதங்களுக்கு 499 ரூபாய்க்கு விளம்பரமில்லா திட்டத்தையும் வழங்கவுள்ளது.

தொலைக்காட்சியை பொறுத்தவரை ஸ்டார் மற்றும் கலர்ஸ், டிஜிட்டல் தளத்தில் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டாரின் கூட்டாக இது பார்க்கப்படுகிறது. இதில் 36.84 சதவீத உரிமை டிஸ்னி வசம் இருக்கும். ரிலையன்ஸ் நிறுவனம் நேரடி உரிமையாளர் என்ற முறையில் 16.34 மற்றும் வயாகாம் 18 மீடியா மூலம் 46.82 சதவீதத்தை கொண்டிருக்கும். இதன் மொத்த ஆண்டு வருவாய் சுமார் 26,000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 டிவி சேனல்கள், 30000+ மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆண்டுக்கு இந்த கூட்டு நிறுவனம் தயாரிக்கும். ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் சுமார் 50 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

ரிலையன்ஸ்-டிஸ்னி கூட்டு செயலியில் மட்டும் இனி ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்பாகும். மேலும், ஜியோசினிமா, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்கான உரிமைகளையும் பெற்றிருந்தது. அதேபோல இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டிகள் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளுக்கான உரிமைகளையும் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் செயலி பெற்றுள்ளது. எனவே இவற்றையும் இந்த ரிலையன்ஸ்-டிஸ்னி செயலியில் காணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE