ஆர்சிபி கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமனம்

By KU BUREAU

பெங்களூரு: ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் கேப்டனாக அதிரடி பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு சீசன்களிலும் கேப்டனாக செயல்பட்ட டூ பிளெஸ்ஸிஸ் இம்முறை டெல்லி அணிக்கு மாறி உள்ளார். இதனால் விராட் கோலி மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் உலா வந்த நிலையில் தற்போது ரஜத் பட்டிதார் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணியின் 8-வது கேப்டன் ரஜத் பட்டிதார் ஆவார். அவர், கடந்த 2021-ம் ஆண்டு ஆர்சிபி அணியில் இணைந்திருந்தார். 28 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 158.85 ஸ்டிரைக் ரேட்டுடன் 799 ரன்கள் சேர்த்திருந்தார். 31 வயதான ரஜத் படிதார், ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.

அதேவேளையில் அவர், 2024-25 சீசனில் சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி ஆகியவற்றில் மத்திய பிரதேச அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்திய பிரதேச அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. இந்தத் தொடரில் ரஜத் பட்டிதார் 9 ஆட்டங்களில் 428 ரன்கள் விளாசியிருந்தார். அதேவேளையில் விஜய் ஹசாரே தொடரில் 226 ரன்கள் எடுத்திருந்தார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை பட்டம் வென்றது இல்லை. அதிகபட்சமாக 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு இறுதி போட்டியில் கால்பதித்து இருந்தது. எனினும் கடைசி 5 சீசன்களில் 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இதில் 2024 சீசனும் அடங்கும். இந்த சீசனில் ஆர்சிபி அணி தனது கடைசி 6 லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டு பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது. ஆனால் எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி கண்டு வெளியேறியது.

ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரஜத் பட்டிதார் கூறும்போது, “எனது கேப்டன்ஷிப் பற்றி சொல்ல வேண்டுமானால், போட்டிகளின் நிலைமை பற்றி அறிவேன். எனவே வீரர்களை ஆதரிப்பதும், அவர்களுடன் நிற்பதும், அவர்கள் நிதானமாகவும் நம்பிக்கையுடனும் உணரும் ஈடுபாட்டைக் கொடுப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.

சிறந்த நபர்களில் ஒருவரால் அணி சூழப்பட்டிருப்பது எனக்கு அதிர்ஷ்டம், எங்களிடம் தலைவர்களின் குழுவும் உள்ளது, அவர்களின் அனுபவமும் யோசனைகளும் நிச்சயமாக ஒரு தனிநபராக எனது புதிய தலைமை பண்புக்கும், வளர்ச்சிக்கும் உதவும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE