கெலமங்கலம் அருகே 13-ம் நூற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு கண்டெடுப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் அருகே 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூர்வாதராயர்கள் கல்வெட்டை கண்டறிந்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கெலமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ள சந்தனப்பள்ளி என்ற ஊரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது காப்பாட்சியர் சிவக்குமார், ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் நடுகல் கோயிலுக்கு துணையாக வைத்து கட்டப்பட்ட ஒரு துண்டு கல்வெட்டைக் கண்டறிந்தனர். அந்த கல்வெட்டு அங்கேயே படி எடுக்கப்பட்டு படிக்கப்பட்டது.

இதுகுறித்து காப்பாட்சியர் சிவக்குமார் கூறும்போது, ''சூளகிரி, ஓசூர், கெலமங்கலம் ஆகிய பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்களான பூர்வாதராயர்கள் பற்றிய கல்வெட்டுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அந்த வகையில் சந்தனப்பள்ளி ஊரில் கிடைத்த இந்த கல்வெட்டு இவர்களின் ஆட்சிப்பகுதியில் இந்த சந்தனப்பள்ளி இருந்துள்ளதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. 13ம் நுாற்றாண்டில், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த பூர்வாதராயர் வம்சத்தை சேர்ந்த தாமத்தாழ்வார் என்பவர் இப்பகுதியில் இருந்த இளையாழ்வார் என்பவருக்கு இரண்டு கண்டகம் விளைகின்ற நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு வாசகம் "ஸ்வஸ்திஸ்ரீக்கு லோத்துங்க சோழ கங்கரயர் தாமத்தாழ்வார் இளையாழ்வாருக்கு விட்ட தானம் கழநி இரு கண்டகம்". பூர்வாதராயர்கள் கங்க வம்சத்தை சார்ந்தவர்கள் என்பது இக்கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. மேலும் இதில் குறிப்பிட்டுள்ள 'கண்டகம்' என்பது பழந்தமிழர் கையாண்ட ஒரு முகத்தல் அளவையாகும்.

அதாவது 4 படி கொண்டது 1 வல்லம், 40 வல்லம் கொண்டது 1 கண்டகம். இதன் அடிப்படையில் 320 படி விதைநெல் விளைகின்ற நிலப்பரப்பு. அதாவது 100 ஏக்கர் அளவுக்கு உள்ள கழனியை தானமாக அளிக்கப்பட்டுள்ளதை காணும் போது, இளையாழ்வார் என்பவன் படைத்தலைமை பெற்று அரசுக்கு வெற்றியை ஈட்டித்தந்திருப்பான் என்பது தெளிவாகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE