‘கேட்டுக்கிட்டேதான் இருக்கோம்...’ - திருச்சி மண்டல தீயணைப்புத் துறை எதிர்பார்ப்பு வரும் பட்ஜெட்டில் நிறைவேறுமா?

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: தீயணைப்புத் துறையின் திருச்சி மண்டல துணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழ் மொத்தம் 103 தீயணைப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில், பெரம்பலூரிலிருந்து அரியலூர் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை அந்த மாவட்டத்துக்கென தீயணைப்புத் துறை மாவட்ட நிர்வாக அலுவலகம் அமைக்கப்படவில்லை.

அதேபோல, நாகையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் உதயமான பிறகு அங்கும் தீயணைப்புத் துறைக்கு மாவட்ட நிர்வாக அலுவலகம் தொடங்கப்படாமல் உள்ளது. இதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கி்ன்றனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அலுவலர்கள் கூறியது: அரியலூர்-பெரம்பலூர் மற்றும் நாகை-மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தனித்தனியாக தீயணைப்பு மாவட்ட அலுவலர் நியமித்தால்தான், நிர்வாகம் செய்யவும், பேரிடர் பணிகளில் விரைந்து செயல்படவும் ஏதுவாக இருக்கும். 2004-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் தீயணைப்பு மாவட்ட எல்லைகள் வரையறை செய்யப்பட்டன. அப்போது, புதிய வருவாய் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டும், தீயணைப்பு மாவட்டங்களை மறுவரையறை செய்யவில்லை.

40 கி.மீ தொலைவுக்கு ஒரு தீயணைப்பு நிலையம் இருக்க வேண்டும். ஆனால் கரூர்தீயணைப்பு கோட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, புகழூர், திருச்சி வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட முசிறி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதேபோல, பெரம்பலூர் தீயணைப்பு கோட்டத்தில்(பெரம்பலூர், அரியலூர் வருவாய் மாவட்டங்கள்) பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் திருச்சி வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட துறையூர், கடலூர் வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட வேப்பூர் என 6 தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே உள்ளன.

அடிக்கடி விபத்துகள்: இதில், பெரம்பலூர் வருவாய் மாவட்டத்துக்கென பெரம்பலூரில் மட்டுமே தீயணைப்பு நிலையம் உள்ளது. ஆனால், இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதால், விபத்தில் சிக்கியவர்களை மீட்க ரூ.1.10 கோடியில் அவசரகால மீட்பு ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தீ விபத்தோ, கால்நடைகள் கிணற்றில் தவறி விழுந்தாலோ, ஒரே நேரத்தில் 2 சாலை விபத்துகள் ஏற்பட்டாலோ அங்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, தொழுதூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இரண்டாக பிரிக்க வேண்டும்: மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடலூர் தீயணைப்பு கோட்டத்தில் 16 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காகவும், பேரிடர் பணிகளை எளிதில் மேற்கொள்வதற்காகவும் கடலூர் தீயணைப்பு கோட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு பலமுறை முன்மொழிவு அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் உள்ளன. எனவே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE