திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் கோவைக்கு அலைக்கழிப்பு?

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல், இதய நோய் மற்றும் சிறுநீரகப் பிரிவில் உயர் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்தவர்களுக்கு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் களும், நோயாளிகளும் கூறியதாவது: இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு 10 பேரும், வாகன விபத்தில் சிக்குவது, வீட்டில் தடுமாறி விழுவது, உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்து தலையில் காயம் அடைபவர்கள் என சுமார் 20 பேரும், தலைக்காயங்கள் சுமார் 5 பேரும் என நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.

இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால், பலரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தலையில் காயம்பட்டால், நரம்பியல் மருத்துவர் தேவைப்படாது. மாறாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்தான் தேவை. அந்த பணியிடம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ளது. அதேபோல் இதயநோய் நிபுணர், சிறுநீரக மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக உள்ளதால், பலருக்கும் சிகிச்சை அளிக்க தாமதமாகிறது.

அதேபோல் வாகன விபத்தில் சிக்குபவர்களின் உடல் உறுப்புகள் சேதமடைந்தது தொடர் பாகபாதிக்கப்பட்டவர்கள் காப்பீடு கோர வேண்டுமெனில், மருத்துவக்குழு பரிந்துரைக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த குழுவிலும், போதிய மருத்துவ நிபுணர்கள் இங்கு இல்லாததால், கோவைக்கே
அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் கூடுதல் கவனம் செலுத்தினால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அவசரத்துக்கு நாடி வரும் அனைத்து தரப்பு பொது மக்களும் பயன்பெறுவர், என்றனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் அலுவலர்கள் சிலர் கூறும்போது, “கோவை, திருச்சி, சேலம், சென்னை மற்றும் மதுரையில் அரசு பன்னோக்கு மருத்துவமனைகள் உள்ளன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில இடங்கள் காலியாக இருப்பதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE